நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக சென்னை கோபாலபுரம் ரவிக் குமார், அவரது மகன் ரிஷிக்காந்த் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீ ஸார் வழக்குப் பதிவு செய்துள்ள னர். இருவரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் என் மகனின் புகைப் படத்தில் மாறுதல் இருந்தது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தபோது, ஹால் டிக்கெட்டில் திருத்தம் செய்வதற்கான காலக் கெடு முடிந்துவிட்டதால் தேர்வு எழுதுமாறு அதிகாரிகள் தெரிவித் தனர். இருப்பினும் எங்கள் மீது போலீஸார் ஆள்மாறாட்டம் வழக் குப் பதிவு செய்துள்ளனர். எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசார ணைக்கு வந்தபோது நீட் தேர்வு மையத்தில் பதிவான மாணவனின் கைரேகையை ஒப்பிட்டு அறிக்கை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இம்மனு நீதிபதி ஜி ஆர் சுவாமிநா தன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மாணவனின் கைரேகையும், நீட் தேர்வின்போது பதிவான கை ரேகையும் ஒத்துபோகவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ரவிகுமார் சிபிசிஐடி போலீஸார் முன்பு இன்று (நவ.29) காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி ஆள்மாறாட்ட வழக்கில் தனக்குத் தெரிந்த உண்மைகளைத் தெரிவிக்க வேண் டும் என்று கூறி விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.