தாம்பரத்தில் நேற்று அதிகாலை கனமழை பெய்தது. அங்கு 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இதற்கிடையே தமிழகம் மற்றும் புதுச்சேயில் அடுத்த 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங் களில் மிதமான மழை பெய்யும் என்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காலமாக இருந்தாலும், இந்த ஆண்டு நவம்பர் மாத தொடக் கத்தில் இருந்து இறுதி வாரம் வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை இல்லை. சில நாட்கள் மழை இன்றி வறண்ட வானிலை நிலவியது.
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிக பட்சமாக தாம்பரத்தில் 15 செ.மீ மழை பெய்தது. இதன் காரண மாக தாம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சேலையூர், துரைப் பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந் துள்ளது.
ஜிஎஸ்டி சாலையில் வெள்ளநீர் தேங்கியதால் நேற்று முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் மேலும் 3 நாட்க ளுக்கு மழை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
வங்கக் கடலில் இலங்கை அருகே உருவாக இருக்கும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 30, டிசம்பர் 1, 2 ஆகிய 3 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப் புள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒருசில இடங் களில் கனமழையும், ஓரிரு இடங் களில் மிக கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வரும் நாட்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.
இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால், அடுத்த 24 மணி நேரத்துக்கு, அந்தப் பகுதியில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் 15 செ.மீ, தாம்பரம் விமானப்படை தளத்தில் 13 செ.மீ, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 10 செ.மீ, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 9 செ.மீ, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் 8 செ.மீ, கடலூர், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.