திருப்பூர்
பல்லடம் அருகே பழைய ரூபாய் நோட்டுகளுடன் தவிக்கும் 2 மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித் தொகை வழங்க வருவாய்த் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான 2 மூதாட் டிகள், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளாக தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ.46 ஆயிரத்தை மாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.
“மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எங்களுக்கு தெரியாது. எங்களின் சேமிப்பு பணம் என்பதால் மிகவும் பத்திர மாக பாதுகாத்தோம். மருத்துவச் செலவுக்காக யாரையும் நம்பாமல், கடைசி கையிருப்பாக வீட்டில் வைத்திருந்தோம். அதுவும் தற் போது செல்லரிக்காமலேயே வீணாகிவிட்டது. எங்கள் இருவரின் உடல்நிலை கருதி, செல்லாத இந்த நோட்டுகளை அரசு மாற்றித் தர பரிவு காட்ட வேண்டும். சட்டம் என்பதைத் தாண்டி, மனிதாபி மானத்தோடு இதை அணுக வேண்டும்” என்கின்றனர் சகோதரி கள்.
ஆட்சியர் உத்தரவு
இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியை தொடர்ந்து, விசாரிக்குமாறு பல்லடம் வரு வாய்த் துறையினருக்கு ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வட்டாட்சியர் சிவசுப்பிரமணியம் மேற்பார்வையில், வருவாய் ஆய்வாளர் சதீஷ் மற்றும் பூமலூர் கிராம நிர்வாக அலுவ லர் மா.கோபி ஆகியோர் விசார ணையில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: ஆவணங்களின்படி சகோதரிகள் இருவரின் பெயரும் ரங்கம்மாள்தான். மூத்தவர் பழனி சாமி ரங்கம்மாள் (82). இளையவர் காளிமுத்து ரங்கம்மாள்(77). கிராம மக்கள் இளையவரை தங்கம்மாள் என அழைத்து வந்துள்ளனர்.
மூத்த சகோதரிக்கு 2 மகன் மற் றும் 4 பெண் குழந்தைகள். இளைய சகோதரிக்கு 3 மகன்கள், 3 மகள் கள். அனைவரும் கூலி வேலை செய்பவர்கள். மகன்கள், மகள் களுக்கு திருமணமாகிவிட்டது. சகோதரிகள் மட்டும் ஓடு வேயப்பட்ட வீட்டில் தங்கியிருந்து, ரேஷன் அரிசியை சாப்பிட்டு பிழைப்பை நடத்தியுள்ளனர். அதே பகுதியில் வசிக்கும் மகன்கள் அவ்வப்போது வந்து சாப்பாட் டுக்கு உதவியுள்ளனர்.
பணம் இருப்பது தெரிந்தால், மகன்கள் செலவு செய்து விடுவார்கள் என்பதால்தான் யாருக்கும் தெரியாமல் சேமித்து உள்ளனர். இவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு ஆகிய வற்றை பெற்றுள்ளோம். முதல் கட்டமாக இருவருக்கும் முதியோர் உதவித்தொகை மற்றும் சிகிச்சை ஏற்பாடுகளையும் செய்ய உள் ளோம்.
இதுதொடர்பாக விசாரணை அறிக்கையை ஆட்சியருக்கு அனுப்ப உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.