கந்து வட்டி புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வரின் பாதுகாப்புப் பாதையில் திடீரென புகுந்த இளைஞரை காவல் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத் தொடக்க விழா நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காரில் புறப்பட்டார். விழா அரங்கை விட்டு முதல்வரின் கார் சாலையை அடைந்தபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை மீறி இளைஞர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விழுப்புரம் மாவட்டக் காவலர்கள் சிலர் அந்த இளைஞரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். இதையடுத்து முதல்வரின் கார் அந்த இடத்தை விட்டு மெதுவாகக் கடந்து சென்றது.
அந்த இளைஞரிடம் சிப்காட் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அவர் குடியாத்தம் அடுத்துள்ள மூங்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (35) என்று விசாரணையில் தெரியவந்தது. இவர் கடந்த 2014-ம் ஆண்டு அகரம் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்பவரிடம் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். கந்து வட்டியாக ரூ.45 ஆயிரம் வரை வசூலித்த அஜய், சுதாகர் எழுதிக் கொடுத்த பாண்டு பத்திரத்தை வைத்து வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் முதல்வரிடம் மனு அளிக்க சுதாகர் நேரில் வந்துள்ளார். அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் கோரிக்கை மனுவும் புத்தகம் ஒன்று மட்டும் இருந்தது. அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆயுதங்கள் ஏதும் அவரிடம் இல்லாத நிலையில் பாதுகாப்பு வளையத்துக்குள் அவர் நுழைந்தது தொடர்பாக தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தனர்.