மதிப்பெண் குறைவு என பெற்றோர் திட்டியதால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சிறுவன் வெளியேறினார். பல இடங்களில் தேடி கிடைக்காத நிலையில், ஷாப்பிங் போன இடத்தில் தனியாய் நின்றவரை விசாரித்து பெற்றோரிடம் சேர்த்த 2 ஆயுதப்படை பெண் போலீஸாருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
ஷெனாய் நகரைச் சேர்ந்த 13 வயது சிறுவனை அவனுடைய அப்பா இடைத்தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்து விட்டான் என்று திட்டினார். இந்நிலையில் நேற்று (27.11.19) காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற சிறுவன், 3 மணிக்கு பள்ளி முடிந்ததும் வீட்டிற்குச் செல்லவில்லை.
சிறுவன் காணாமல் போனதால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்ற போலீஸார் சிறுவனைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பெண் காவலர்கள் M.கயல்விழி (30), K.காமாட்சி (28) இருவரும் ஓய்வு நேரத்தில் ஷாப்பிங் செல்ல தி.நகர் ரங்கநாதன் தெருவுக்குச் சென்றனர். அப்போது ஒரு இடத்தில் கும்பலாக இருப்பதைப் பார்த்து என்னவென்று விசாரிக்கச் சென்றனர். சிறுவனைச் சுற்றி கூட்டமாக நின்றிருந்ததைக் கண்ட பெண் காவலர்கள் சிறுவனை அழைத்து விசாரித்தனர்.
தான் ஒரு ஆதரவற்ற சிறுவன், அப்பா அம்மா இருவரும் தனக்கு இல்லை என்று அச்சிறுவன் பெண் காவலர்களிடம் கூறியுள்ளார். சிறுவனின் தோற்றம், பேசும் தோரணையை வைத்து சந்தேகப்பட்ட பெண் காவலர்கள் அவரிடம் மேலும் விசாரித்த போது உண்மை வெளிவந்தது.
அப்பா திட்டியதால் தான் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வந்துவிட்டதாக சிறுவன் கூறியுள்ளார். ஷெனாய் நகரில் வீடு இருப்பதை சிறுவன் கூறியதும், அந்தப் பெண் காவலர்கள் உடனே டி.பி. சத்திரம் காவல் ஆய்வாளரின் தொலைபேசி எண் பெற்று அவரிடம் சிறுவனைப் பற்றிக் கூறியுள்ளனர்.
காவல் ஆய்வாளர் சொன்னதன் பேரில் அச்சிறுவனை மாலை 7.30 மணிக்கு ஸ்டேஷனில் பெண் காவலர்கள் ஒப்படைத்தனர். டிபி சத்திரம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் அச்சிறுவனை விசாரித்து நடந்ததைக் கேட்டு, அச்சிறுவனின் பெற்றோரை அழைத்துள்ளார்.
மதிப்பெண் மட்டும் வாழ்க்கையல்ல. மதிப்பெண்ணுக்காக மதிப்புமிக்க உங்கள் மகனை இழந்துவிடாதீர்கள் என்று காவல் ஆய்வாளர் சிறுவனின் தாய், தந்தைக்கு அறிவுரை கூறினார். அச்சிறுவனிடம் கவனத்தைச் சிதறடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தும்படியும் கூறி பெற்றோருடன் அனுப்பினார்.
ஷாப்பிங் போன இடத்திலும் மறக்காமல் தங்கள் காவல் பணியைச் செய்த ஆயுதப்படை பெண் காவலர்கள் கயல்விழி, காமாட்சி ஆகிய இருவருக்கும் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் நன்றி தெரிவித்தார்.