மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் மழையால் பாபநாசம் அணை நிரம்பியிருக்கும் நிலையில் அதிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்துவரும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்றுமுன்தினம் நேற்று முன்தினம் 142.35 அடியாக இருந்தது. நேற்று காலையில் நீர்மட்டம் 142.60 அடியாக உயர்ந்தது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 1754 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இதனால் அகஸ்தியர் அருவியில் வெள்ளம் கரைபுரண்டது. ஏற்கெனவே அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறியாரும் செல்லாத வகையில் வனத்துறையினல் சாலையில் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பாபநாசம் அணையிலிரந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரள்கிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றங்கரையிலுள்ள படித்துறைகளுக்கு குளிப்பதற்கோ, துணிதுவைப்பதற்கோ செல்ல வேண்டாம் என்று வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் தாமிரபரணி பாசன கால்வாய்களிலும் அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது.
அதன்படி கன்னடியன் கால்வாயில் வினாடிக்கு 1750 கனஅடியும், கோடகன் கால்வாயில் 3444 கனஅடியும், பாளையங்கால்வாயில் 2900 கனஅடியும், திருநெல்வேலி கால்வாயில் 1440 கனஅடியும், மருதூர் கீழக்காலில் 400, மருதூர் ஆற்றில் 851 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திலுள்ள அணைகள் மற்றும் பிறஇடங்களில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 22, சேர்வலாறு-24, மணிமுத்தாறு- 7.8, கொடுமுடியாறு- 5, கடனா- 7, ராமநதி- 12, அம்பாசமுத்திரம்- 12, சேரன்மகாதேவி- 1, நாங்குநேரி- 1, பாளையங்கோட்டை- 1.