விடுதி வசதி கோரி திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு இரண்டு மணிநேரம் தொடர்ந்து செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு 150 மாணவிகள் பயின்றுவருகின்றனர். இவர்கள் தங்கியுள்ள விடுதி பழுதடைந்துள்ளதால், அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து அருகிலுள்ள மருத்துவமனை வார்டுகள் இருந்த பகுதியில் மாணவிகளை தங்கிக்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்த கட்டிடத்தில் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பற்ற நிலையில் கண்ணாடி ஜன்னல்கள் உள்ளது. அருகில் ஆண்கள் வார்டு உள்ளது. மேலும் 150 மாணவிகளுக்கு மூன்று கழிப்பறைகள் மட்டுமே உள்ளது. சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகக் கூறி மாணவிகள் தங்கமறுத்தனர்.
தொடர்ந்து பாதுகாப்பான, சுகாதாரமான, போதிய அடிப்படை வசதிகள் உள்ள கட்டிடத்தில் தங்கவைக்க வேண்டும் என கோரி இன்று காலை அரசு மருத்துவமனை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் தங்கவைக்கவேண்டும் என கோரிக்கைவைத்தனர்.
புதிய கட்டிடம் திறப்புவிழா காணாமல் இருப்பதால் திறப்புவிழாவிற்கு பிறகே முடிவெடுக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகத்தரப்பில் கூறப்பட்டது. இதனால் சாலையில் நின்றுகொண்டே செவிலியர் பள்ளி மாணவிகள் தங்கள் பெட்டி, படுக்கைகளுடன் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., மணிமாறன் சாலைமறியலை கைவிடக்கோரி மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சாலை மறியல் செய்வது சட்டப்படி குற்றம், ஓரமாக நின்று உங்கள் கோரிக்கையை வலியுறுத்துங்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
போலீஸார் கூறியதை மாணவிகள் கண்டுகொள்ளாமல் மழை பெய்தபோதும் நனைந்துகொண்டே தொடர்ந்து இரண்டு மணிநேரத்திற்கு மேலாக சாலைமறியலில் ஈடுபட்டனர். வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது.
இதையடுத்து வட்டாட்சியர் பாண்டிச்செல்வி, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு மருத்துவமனைக்குள் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் தங்கவைக்க மாநகராட்சி ஆணையாளரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்ததையடுத்து மாணவிகள் கலைந்துசென்றனர்.