கோப்புப் படம் 
தமிழகம்

ஓட்டல்களில் வெங்காயத்துக்கு மாற்றாகும் தக்காளி, வெள்ளரிபிஞ்சு

செய்திப்பிரிவு

வெங்காய விலை உயர்வு காரணமாக திருப்பூரில் உள்ள ஓட்டல் களில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. வெங்காயத்துக்கு பதிலாக தக்காளி, வெள்ளரி பிஞ்சு போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் கடந்த சில வாரங் களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதோடு, கடும் தட்டுப்பாடும் நிலவுகிறது. முக்கிய காய்கறி சந்தை களுக்கும் வெங்காய வரத்து சரிந்துள்ளது. இதனால் ஓட்டல்களில் உணவு சமைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் உள்ள காய்கறி சந்தைகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.100, சின்ன வெங்காயம் ரூ.130 வரை விற்கப்படுகிறது.

இதுதொடர்பாக பல்லடத்தைச் சேர்ந்த காய்கறி விற்பனை நிறுவனஉரிமையாளர் ராமசாமி ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, ‘வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் முன் பெரிய வெங்காயம் கிலோ ரூ.30, சின்ன வெங்காயம் கிலோ ரூ.40-க்கு விற்பனையானது.

தற்போது வரத்து குறைவால் மொத்தமாக வாங்கும் எங்களுக்கே கிலோ ரூ.80-க்கு கிடைக்கிறது. நாங்கள் வாங்கி கழிவுகள் போக, விற்கும்போது ரூ.100 விலை வந்து விடுகிறது. உதாரணமாக, 56 கிலோ கொண்ட மூட்டையை வாங்கும் போது, அதில் 10 கிலோ வரை கழிவு சென்றுவிடும். எஞ்சுவது 46 கிலோ தான். ஆனால் நாங்கள் கொடுப்பது 56 கிலோவுக்கான விலை என்பதால் அந்த 10 கிலோவுக்கான விலையை சேர்க்க வேண்டியுள்ளது.

இதுவழக்கமான நடைமுறை தான். விலை உயர்வுக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரத்து மிகவும் குறைந்துள்ளதே முக்கிய காரணம்’ என்றார். சமையலில் ஒதுக்க முடியாத நிலையில் உள்ள வெங்காயத்தின் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் உள்ள ஓட்டல்களில் உணவுகளின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட பிரியாணி ரூ.100-க்கும், வெங்காய தோசைக்கு வழக்கமான விலையி
லிருந்து ரூ.10-ம், ஆம்லெட் டுக்கு ரூ.5-ம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தக்காளி, வெள்ளரிபிஞ்சு

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஓட்டல் சங்கத் தலைவர் கே.மூர்த்தி கூறும்போது, ‘வெங்காயம் ஒரு கிலோ வாங்க நாங்கள் ரூ.100 செலவிட வேண்டியுள்ளது. வெங்காயம் பயன்படுத்தாத உணவுப் பொருட்கள் மிகவும் குறைவே. சில ஓட்டல்களில் வெங்காயத்துக்குப் பதிலாக தக்காளி, வெள்ளரிபிஞ்சு போன்றவற்றை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெங்காய விலை உயர்வால் ஓட்டல் உரிமையாளர்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இப்பிரச்சினை எழுந்தது. இப்பிரச்சினைக்கு விரைவாக அரசு தீர்வு காண வேண்டும்’ என்றார்.

- பெ.ஸ்ரீனிவாசன்

SCROLL FOR NEXT