பழங்கால தங்க நாணயம் எனக் கூறி விற்கப்பட்ட போலி தங்கம். 
தமிழகம்

மேட்டுப்பாளையம் அருகே போலி தங்கத்தை விற்று மோசடி செய்த  பெண் கைது 

செய்திப்பிரிவு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, புதையல் மூலம் கிடைத்த பழங்கால தங்க நாணயம் என்று கூறி, போலி தங்கத்தை விற்று மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

மேட்டுப்பாளையம் அருகே யுள்ள பெரியநாயக்கன் பாளையம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி கவிதா. இவர் அதே பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு துணி எடுக்க, கிருஷ்ணகிரி குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரது மனைவி லட்சுமி (32) வந்துள்ளார். அவ்வப்போது இவர் கடைக்கு வந்து துணி எடுத்ததால், கவிதாவுடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

தான் சாலைப் பணியாளர் என்றும், தற்போது காரமடை ரங்கா நகர் பகுதியில் வசிப்பதாகவும் கவிதாவிடம் லட்சுமி கூறியுள்ளார். இந்த நிலையில் லட்சுமி, தன்னிடம் பழங்கால தங்க நாணயங்கள் உள்ளதாகவும், சாலைப் பணிக்கு குழி வெட்டியபோது அவை கிடைத்ததாகவும் கவிதாவிடம் கூறியுள்ளார். அவற்றை விற்கமுடியவில்லை என்றும், ஆண்களிடம் கொடுத்தால் தங்கத்தை வாங்கிக் கொண்டு, ஏமாற்றி விடுவார்கள் என அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கவிதாவிடம், ‘நீங்களே இந்த பழங்கால தங்க நாணயங்களை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றும் வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து, தங்கக் கட்டிகளை எடுத்து வருமாறு கவிதா கூறியதால், ஜார்ஜ் மன்னர் உருவம் மற்றும் தாமரைச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்களை கொண்டு வந்து காட்டியுள்ளார் லட்சுமி.

அதில் சிறு பகுதியை சோதித்தபோது, அவை உண்மையான தங்கமாக இருந்துள்ளது. இதையடுத்து, ரூ.4 லட்சம் விலை சொன்ன லட்சுமியிடம் பேரம் பேசி, ரூ.2 லட்சம் கொடுத்து, தங்க நாணயங்களை வாங்கியுள்ளார். பின்னர், அவற்றை முழுமையாக சோதித்தபோது, அவை போலி என்பது தெரிய வந்தது. போலி தங்கத்தை விற்ற லட்சுமி தலைமறைவாகி விட்டார்.

இதற்கிடையில், காரமடை பகுயில் இதேபோல, தங்கக் கட்டி இருப்பதாகக் கூறி, ஒரு பெண் அவற்றை விற்க முயல்வதாக கவிதாவுக்கு, அவரது குடும்ப நண்பர் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, லட்சுமியை பிடித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணை நடத்தி, போலி தங்கத்தைக் கொடுத்து ஏமாற்றியதாக லட்சுமியைக் கைது செய்தனர். இதேபோல வேறு யாரிடமாவது போலி தங்கத்தைக் கொடுத்து, மோசடி செய்துள்ளாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT