புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்படுவதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தை இன்று (நவ.28) தொடங்கி வைத்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
"வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், நாற்றாம்பள்ளி ஆகிய பகுதிகள் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளன. இந்தப் பகுதி மக்கள், அரசின் சேவைகளைப் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட மற்ற துறை அலுவலகங்களுக்குச் செல்ல கிட்டத்தட்ட 2 மணிநேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதனால், திருப்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆதியூர் முதல் கோடியூர் வரை எட்டு திசைகளில் 10 கோயில்கள் இருந்ததால் திருப்பத்தூர் என்று பெயர் வந்தது என்றும், இப்பகுதி பல்வேறு மன்னர்களால் ஆண்ட போது பிரம்மபுரம், திருப்போரூர், திருவனபுரம் என பல பெயர்களால் அழைக்கப்பட்டது. இந்த மாவட்டம், ஜவ்வாது மலை, ஏலகிரி மலை என இரு பெரிய மலைகளால் சூழப்பட்டுள்ளது. ஆம்பூர் பிரியாணி மிகவும் பிரபலமானது. தேசப்பற்று மிக்க மக்கள் வாழும் மாவட்டம் திருப்பத்தூர்.
திருப்பத்தூர் மாவட்ட தலைநகரம் திருப்பத்தூர் நகரம். மாவட்டத்தின் பரப்பளவு 17.98 சதுர கி.மீ. இந்த மாவட்டத்தின் மக்கள் தொகை 11 லட்சத்து 11,812. திருப்பத்தூர், வாணியம்பாடி என இரு வருவாய் கோட்டங்களும், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாற்றாம்பள்ளி என 4 வட்டங்களும், 15 உள் வட்டங்களும் 195 வருவாய் கிராமங்களும் இம்மாவட்டத்தில் உள்ளன.
உள்ளாட்சி நிர்வாகத்தை பொறுத்தவரை ஆம்பூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை என 4 நகராட்சிகளும், நாற்றாம்பள்ளி, திருப்பத்தூர் உட்பட 7 ஊராட்சி ஒன்றியங்களும் ஆலங்காயம், நாற்றாம்பள்ளி மற்றும் உதயேந்திரம் என 3 பேரூராட்சிகளும் 207 கிராம ஊராட்சிகளும் உள்ளன.
புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்படுவதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால், இன்றைக்கு எதிர்க்கட்சிகள் பொய்யான கருத்தை வெளியிடுகின்றனர். 2018-ம் ஆண்டு மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.
திருப்பத்தூர் மெயின் ரோட்டில் அனைத்து அரசு அலுவலகங்களும் 20 ஏக்கர் பரப்பளவில் அமைத்துத் தரப்படும். இம்மாவட்டத்தில் தொழில்கள் மேம்பட உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
திமுக ஆட்சியில்தான் சுய உதவிக்குழுக்கள் ஏற்பட்டதாகவும், அதிக கடன்கள் வழங்கப்பட்டதாகவும் ஸ்டாலின் பொய்யான தகவலைச் சொல்லி வருகிறார். ஆனால், அதனைச் செய்து காட்டியது அதிமுக அரசுதான்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.