மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம் 
தமிழகம்

வெங்காய விலை உயர்வு: கட்டுக்குள் வைக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்; ஸ்டாலின்

செய்திப்பிரிவு

வெங்காய விலையை கட்டுக்குள் வைக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வெங்காயச் சந்தை உள்ளது. அங்கிருந்துதான் நாடு முழுவதற்கும் வெங்காயம் அனுப்பப்படுகிறது. தென்மேற்குப் பருவமழை காலத்தில் மகாராஷ்டிராவில் பெய்த கனமழையால், வெங்காயப் பயிர்கள் பாதிக்கப்பட்டன. 'கியார்', 'மஹா' ஆகிய இரு புயல்களால் வெங்காய உற்பத்தி குறைந்தது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வெங்காயம் அனுப்புவது பாதிக்கப்பட்டது.

கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக தினமும் 65 லோடுகள் வரை வெங்காயம் வரும். தற்போது 40 லோடுகள் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, சென்னையில் தரத்துக்கு ஏற்றவாறு பெரிய வெங்காயம் கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரையும், சின்ன வெங்காயம் ரூ.100 முதல் ரூ.160 வரையும் விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெங்காயம் வாங்கும் அளவு குறைந்துள்ளது.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் நேற்று (நவ.28) தன் ட்விட்டர் பக்கத்தில், "வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகமாகிறது. வெங்காயத்தின் அவசியத் தேவையை உணர்ந்து விலையைக் கட்டுக்குள் வைக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும். நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் இதனை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT