ரயில் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 33 கோடி அதிகரித்து 844 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், புதிய ரயில்கள் இயக்குவதைக் குறைத்து, பல மடங்கு கட்டணம் வசூலிக்கும் சிறப்பு ரயில்களை அதிக அளவில் இயக்கி வருகிறது ரயில்வே துறை.
வெளியூர் பயணம் செய்ய ரயில் போக்குவரத்து வசதியாக இருப்பதால், பெரும்பாலான மக்கள் அதிக அளவில் ரயிலில் பயணம் செய்கின்றனர். இதேபோல், நகரமயமாக்கல் அதிகரித்து வருவதால் மற்றொருபுறம் ரயில் போக்குவரத்து தேவையும் அதிகரித்து வருகிறது.
இதன்அடிப்படையில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2015-ம் ஆண்டில் 811 கோடியாக இருந்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 844 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, கடந்த 4 ஆண்டுகளில் 33 கோடி அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் ஆண்டுதோறும் புதிய ரயில்களின் இயக்கம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கும். ஆனால், சமீபகாலமாக புதிய ரயில்களின் அறிவிப்பு என்பது குறைந்து விட்டது. 2015-ம் ஆண்டில் 151 புதிய ரயில்களும், 2016-ம் ஆண்டில் 215 புதிய ரயில்களும், 2017-ம் ஆண்டில் 136 புதிய ரயில்களும் அறிமுகம் செய்யப்பட்டன.
மேற்கண்ட புதிய ரயில்கள், வழக்கமான விரைவு, அதிவிரைவு ரயில்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. கடந்த ஆண்டில் வந்தேபாரத் உள்ளிட்ட 20 புதிய ரயில்கள் மட்டுமே அறிமுகம் செய்து இயக்கப்பட்டன. பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு பல மடங்கு கட்டணம் வசூலிக்கும் சுவிதா ரயில்கள், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள் அதிக அளவில் தற்போது இயக்கப்படுகின்றன.
கட்டமைப்பு மேம்பாட்டு பணி
இதுதொடர்பாக ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மக்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதால், ரயில் போக்குவரத்தை மேலும் மேம்படுத்த ரயில்வே வாரியம் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதிய ரயில்கள் இயக்க தண்டவாளம் போன்ற கட்டமைப்பு பணிகள் மிகவும் முக்கியமானது. போதிய அளவில் தண்டவாளங்கள் இல்லாததால், தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் மக்களின் தேவைக்கு ஏற்ப சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறோம்.
இரட்டை பாதை
இரட்டை பாதைகள், புதிய பாதை பணிகள் விரைவுப்படுத்துதல், பழைய பாதைகளை மாற்றி, அதிவேக பாதைகளாக மாற்றுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, இதுபோன்ற கட்டமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் பல்வேறு தொழிற்சாலைகளில் மொத்தம் 19,169 பெட்டிகள் தயாரிக்கப்படவுள்ளன. இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, புதிய ரயில்கள் படிப்படியாக அதிகரித்து இயக்கப்படும்’’ என்றார்.
இதுகுறித்து டிஆர்இயு துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறும்போது, ‘‘ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் நிலையங்களில் நவீன வசதிகள், நல்ல பராமரிப்பு, குறைவான ரயில் விபத்துகள், பாதுகாப்பான பயணங்கள் போன்ற பல அம்சங்கள் இருப்பதால் மக்கள் ரயில் பயணங்களை விரும்புகின்றனர். அதேநேரம் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதையும், ரயில்களை மக்கள் விரும்புவதையும் நல்ல சூழ்நிலையாகக் கருதி தனியார் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டு செயல்படுவது தவறான செயல். இதைக் கண்டித்து டிசம்பர் 8-ம் தேதி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் போராட்டம் நடத்தவுள்ளோம்.
புதிய ரயில்கள் இயக்குவதை குறைத்துக் கொண்டு, பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு பல மடங்கு கட்டணம் வசூலிக்கும் சுவிதா போன்ற ரயில்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. சாதாரண, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தடங்களில் விரைவு ரயில்களை அதிகரித்து இயக்க வேண்டும்’’ என்றார்.