நெல்லை மாவட்டத்தில் திருடப் பட்ட 2 துவாரபாலகர் சிலைகள், ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா கொண்டுவரப் படுகிறது.
நெல்லை மாவட்டம் ஆத்தாள நல்லூர் மூன்றீஸ்வரமுடையார் கோயிலில் இருந்து 2 துவார பாலகர் கற்சிலைகள் 1995-ம் ஆண்டு திருடப்பட்டன. நெல்லை போலீஸார் இந்த வழக்கில் துப்பு துலக்க முடியாமல் கைவிட்டனர்.
இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கினர். 3 மாதம் நெல்லை மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தியதில், சிலை கடத்தலில் தொடர்புடைய சுபாஷ் சந்திர கபூர் கும்பல்தான் சிலையை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த சுபாஷ் சந்திர கபூர், சஞ்சீவ் அசோகன், வல்லப பிரகாஷ், மாமல்லபுரம் லட்சுமி நரசிம்மன், தஞ்சை அண்ணாதுரை, ஊமைத்துரை உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணை யில் துவாரபாலகர் சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆஸ்திரேலிய தூதரகம், அங்குள்ள இந்திய தூதரகம், மத்திய தொல்லியல் துறையினருக்கு சிலை கடத்தல் தடுப்புப் போலீஸார் கடிதம் எழுதினர். இதன் எதிரொலியாக 2 துவாரபாலகர் சிலைகளையும் ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.
அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன், வரும் ஜனவரியில் இந்த சிலைகளை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க உள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த 2 துவாரபாலகர் கற் சிலைகளின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அருங்காட்சியகத் தில் உள்ள மேலும் 5 சிலைகள், சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள 16 சிலைகளும் விரைவில் மீட்கப்படும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தெரிவித் துள்ளார்.