திருநெல்வேலியில் சுலோச்சனா முதலியார் பாலம் பயன்பாட்டுக்கு வந்து 177-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி அதிலுள்ள கல்வெட்டுக்கு மாலை அணிவித்து தன்னார்வலர்கள் இன்று மாலை மரியாதை செலுத்தினர்.
திருநெல்வேலி- பாளையங்கோட்டை ஆகிய இரட்டை நகரங்களை அந்த காலத்தில் பிரித்திருந்த ஆற்றை கடக்கவும் பரிசல்களையே மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அந்த பரிசல்துறையில் உருவாக்கப்பட்டது தான், தற்போதைய சுலோச்சனா முதலி யார் பாலம். ஆற்றை கடக்க மக்கள் சிரமப்படுவதை பார்த்த ஃபேபர் என்ற ஆங்கிலேயரின் எண்ணத்தில் பாலம் கட்டும் திட்டம் உதயமானது.
அக்காலகட்டத்தில் திருநெல் வேலி ஆட்சியரகத்தில் சிரஸ்தார் வேலையில் சுலோச்சனா முதலியார் இருந்தார். அவருக்கு லண்டன் லாட்டரியில் பரிசுத் தொகை கிடைத்ததை அடுத்து, அதிலிருந்து ரூ.50 ஆயிரத்தை பாலம் கட்டுவதற்கு தனிப்பட்ட நபராக அளித்தார். இந்த பாலத்தை ஆங்கிலேய பொறியாளர் டபிள்யூ.எச். ஹார்ஸ்லே என்பவர் கட்டினார். பாலம் கட்டுமான பணிகள் 1843-ல் முடிவுற்று போக்கு வரத்துக்கு திறந்து வைக்கப்பட்டது.
பாலம் கட்டுவதற்கு நன்கொடை வழங்கிய சுலோச்சனா முதலியார் பெயரே பாலத்துக்கு சூட்டப்பட்டது. இந்நிலையில் 1869-1871-ம் ஆண்டுகளில் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாலம் சேதமடைந்தது. இதையடுத்து 1871-ல் பாலத்தை புனரமைப்பு செய்வதற்காக மக்களிடம் நன்கொடை பெற்று பணிகளை மேற்கொண்டார் ஃபேபர். மக்களின் நன்கொடையில் பாலத் தின் நான்கு கண்வாய்கள் மறுபடியும் கட்டப்பட்டன.
இப்போதும் இப்பாலம் திருநெல்வேலி- பாளையங் கோட்டையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருக்கிறது. இதன் அருகே தற்போது ரூ.18 கோடி செலவில் புதிய பாலம் அமைக்கப்படுகிறது.
தனி மனித கொடையால் உருவான சுலோச்சனா முதலியார் பாலத்துக்கு இன்று 177-வது பிறந்த நாள். ஆண்டுதோறும் தன்னார்வலர்களால் இந்த தினத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த விழாவை அரசே நடத்தி சுலோச்சனா முதலியாரை பெருமைப்படுத்த வேண்டும். வருங்கால சந்ததியர் இந்த கொடையாளரின் வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பாலத்தின் முகப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
மூத்த வழக்கறிஞர் வி.டி. திருமலையப்பன், வரலாற்று ஆய்வாளர் டாக்டர் சண்முகம் ஆகியோர் அதிலுள்ள கல்வெட்டுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எழுத்தாளர் நாறும்பூநாதன், திருநெல்வேலி அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி, நூலகர் முத்துகிருஷ்ணன், மதிதா இந்து கல்லூரி முன்னாள் முதல்வர் நமச்சிவாயம், ஐஓபி வங்கி மேலாளர் வெற்றிவேல், பக்தவச்சலம் அறக்கட்டளை அறங்காவலர் சண்முகராஜன், வேணுவன ரோட்டரி கழகத் தலைவர் நடராஜன், சென்ட்ரல் ரோட்டரி கழகத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணை செயலர் முத்துசாமி நன்றி கூறினார்.