தமிழகம்

அனைத்து ரயில் பாதைகளையும் மின்மயமாக்கும் பணி 2022-ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தகவல்

த.அசோக் குமார்

அனைத்து ரயில் பாதைகளையும் மின்மயமாக்கும் பணி 2022-ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கூறினார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் இன்று (புதன்கிழமை) ஆய்வு செய்தார். சிறப்பு ஆய்வு ரயில் மூலம் வந்த அவரை ரயில்வே அதிகாரிகள், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர், ரயில் நிலையத்தில் சுகாதார வசதி, பாதுகாப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். அப்போது, மதுரை கோட்ட மேலாளர் வி.ஆர்.லெனின் மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.

ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மெக்கானிக்கல் பிரிவு உபகரணங்கள் கண்காட்சியை பார்வையிட்டார். ரயில் நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தை திறந்துவைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், "செங்கோட்டை முதல் விருதுநகர் வரை தண்டவாள உறுதித்தன்மை, சிக்னல்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. செங்கோட்டை ரயில் நிலையம் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது. பயணிகள் நலச்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்துள்ளனர். அந்த கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். செங்கோட்டையில் இருந்து புதிய ரயில்கள் இயக்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

செங்கோட்டையில் இருந்து ஆலங்குளம் வழியாக திருநெல்வேலிக்கு புதிய ரயில் பாதை அமைப்பது உட்பட பல்வேறு இடங்களில் புதிய ரயில் பாதைகள் அமைக்க தமிழக அரசிடம் இருந்து நிலம் பெறுவதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. நிலம் பெறுவதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்த பின்னரே புதிய ரயில் பாதைகள் அமைப்பது சாத்தியமாகும்.

நாடு முழுவதும் அனைத்து ரயில் பாதைகளையும் 2022-ம் ஆண்டு இறுதிக்குள் மின்மயமாக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன" எனக் கூறினார்.

கொல்லம்- தாம்பரம் ரயில் பாம்புக்கோவில் சந்தையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனோகரன் எம்எல்ஏ, முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் செய்யது இப்ராகிம் உள்ளிட்டோர் ரயில்வே பொது மேலாளரிடம் மனு அளித்தனர்.

மேலும், “செங்கோட்டை- சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும். தென்காசி- கொல்லம், மதுரை- கொல்லம் இடையே பகல் காலை, மாலையில் ரயில் இயக்க வேண்டும். செங்கோட்டை- கோவைக்கு ரயில் இயக்க வேண்டும். செங்கோட்டையில் இருந்து பெங்களூரு, திருப்பதி, ஹைதராபாத், மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு ரயில்கள் இயக்க வேண்டும்.

சென்னை- செங்கோட்டை இடையே வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க வேண்டும். கோவை- மதுரை பயணிகள் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் வெங்கடேஸ்வரன் மனு அளித்தார்.

SCROLL FOR NEXT