திருமாவளவனிடமிருந்து எந்தவொரு பதிலுமே இல்லை என்று தன் ஃபேஸ்புக் பக்கத்தில் காயத்ரி ரகுராம் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. இந்து கோயில்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து நடிகை காயத்ரி ரகுராம் திருமாவளவனைக் கடுமையாக விமர்சனம் செய்தார். திருமாவளவனை விமர்சித்து இவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவுகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின. இதனைத் தொடர்ந்து பலரும் ட்விட்டர் நிறுவனத்துக்குப் புகார் அளிக்க, காயத்ரியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது.
திருமாவளவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் குறித்த தனது ட்விட்டர் பதிவுகளில், "நவம்பர் 27-ம் தேதி அன்று மெரினாவில், காலை 10 மணிக்குத் தனியாக நிற்பேன். திருமாவளவன் கும்பலால் என்னை என்ன செய்துவிட முடியும் என்று பார்க்கிறேன். திருமாவளவனுக்குத் தைரியமிருந்தால் என்னை எதிர்கொண்டு இந்துக்களைப் பற்றிப் பேசட்டும்" என்று தெரிவித்திருந்தார் காயத்ரி ரகுராம்.
இந்தக் கருத்துகளுக்கு திருமாவளவன் தரப்பிலிருந்து எந்தவொரு பதிலுமே தெரிவிக்கவில்லை. தற்போது இது தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது ஃபேஸ்புக் பதிவில், "இன்றைய தினம் மெரினாவில் கூட்டம் நடத்துவதற்காக திருமாவளவனின் ஒப்புதலுக்காகக் காத்திருந்தேன். இந்த நொடி வரை காத்திருந்தும் எந்தத் தகவலும் அவரிடமிருந்து இல்லை.
விசிக தொண்டர்களை நான் ஏமாற்றும்படி ஆகிவிட்டது. உங்கள் அனைவருக்கும் எனது அன்பை உரித்தாக்குகிறேன். அடுத்த முறை எந்த ஒரு எம்.பி.க்கும், தலைவருக்கும் சாதி, மத அடிப்படையில் பாகுபாடு பார்க்கத் தேவையில்லாது இருக்கட்டும். உண்மையான தலைவர் அனைவரையும் சமமாகவே பாவிப்பார். நீங்கள் எல்லோரும் உங்களின் வழக்கமான பணிகளைத் தொடரவும்" என்று தெரிவித்துள்ளார்.