வார்டுகளில் பொதுச்சேவை மூலம் பொதுமக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள சுயேட்சைகள் குறித்து பிரதான கட்சிகள் ஆய்வு செய்து வருகின்றன.
விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு பிரதான கட்சிகள் பலவும் இதற்கான பணிகளை முன்னதாகவே துவங்கிவிட்டன. விருப்ப மனு பெறுதல், வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிதல், செல்வாக்கான வேட்பாளர்கள் விவரப் பட்டியலைத் தயாரித்தல் என்று மும்முரம் காட்டி வருகின்றன.
உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தளவில் பொதுமக்களிடம் நேரடியாக தொடர்புடைய ஒரு தளமாக இருக்கிறது. அடிப்படை பிரச்னைகளை சரி செய்யவும், குடியிருப்பு, வரிஇனங்கள் என்று அவர்களின் அன்றாட வாழ்வாதார கட்டமைப்புகளையும் உள்ளடக்கியதாக உள்ளது.
இதனால் மாநில, தேசிய திட்டங்களைவிட தங்களுக்கும், தங்கள் பகுதிகளுக்குமான மேம்பாடு, வசதிகள், திட்டங்கள் என்ற ரீதியிலே உள்ளாட்சி வாக்காளர்களின் மனநிலை உள்ளது.
இதற்காக சிற்றூராட்சி முதல் மாநகராட்சி வரையிலான வார்டுகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பலரும் தங்கள் பகுதியில் மக்களுடன் நெருங்கிப் பழகுவதுடன், சேவை நோக்கில் பல்வேறு உதவிகளையும் செய்து வருவது வழக்கம்.
குறிப்பாக சுயேட்சைகள் பலரும் உள்ளாட்சித் தேர்தலை முன்வைத்து பல ஆண்டுகளாக இதுபோன்ற பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதிமக்களுக்கும், இவர்களுக்கும் ஒரு நெருக்கம் ஏற்பட்டு கணிசமான அளவில் வெற்றியும் பெறுகின்றனர்.
இந்நிலையில் பேரூராட்சி, நகராட்சித் தலைவர்கள், மாநகராட்சி மேயர் போன்ற பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் மூலம் தேர்வு செய்ய தமிழக அரசு அவசரச்சட்டம் இயற்றி உள்ளது.
எனவே கவுன்சிலர், தலைவர் என்ற தனித்தனிப்பாதை அடைபட்டு ஒற்றைப்பாதையில் பயணிக்க வேண்டிய நிலை ‘தலைவர் வேட்பாளர்களுக்கு’ உருவாகியுள்ளது.
இந்நிலையில் கட்சிப் பாகுபாடுகளைக் கடந்து வார்டுகளில் செல்வாக்கு உள்ள, சேவை செய்து பொதுமக்களிடம் நல்ல பெயரை சம்பாதித்துள்ள சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் பிரதான கட்சிகளுக்கு அழுத்தமான போட்டியை தரும் நிலை உருவாகி உள்ளது.
எனவே கட்சி சார்பில் இதுபோன்றவர்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. அவர்களின் பின்னணி, சமாளிக்கும் விதம், தேர்தலில் எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு வியூகங்களில் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
இது குறித்து கட்சியினர் சிலர் கூறுகையில், "வார்டுகளைப் பொறுத்தளவில் பிரதான கட்சிகளுக்கு நிகராக அப்பகுதியில் சேவையாற்றி வரும் சுயேட்சைகளின் போட்டி வலுவாக இருக்கும். வெற்றி என்ற நிலையைக் கடந்து வாக்குகளை வெகுவாய் பிரிப்பதில் அவர்களின் பங்கு அதிகம் இருக்கும். சில ஓட்டு வித்தியாசத்திலே பல உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவுகள் இருக்கும் என்பதால் சுயேட்சை வேட்பாளர்களை சாதாரணமாக கணித்துவிட முடியாது" என்றனர்.