குறை பிரசவத்தில் 830 கிராம் எடையுடன் பிறந்த ஆண் குழந்தை ஓசூர் அரசு மருத்துவமனையில் 81 நாட்கள் தொடர்ந்து சிகிச்சையளித்ததையடுத்து, குழந்தையின் எடை ஒரு கிலோ 250 கிராமாக அதிகரித்தது. 
தமிழகம்

830 கிராம் எடையுடன் பிறந்த ஆண் குழந்தையை 81 நாட்கள் சிகிச்சையளித்து காப்பாற்றிய ஓசூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

செய்திப்பிரிவு

830 கிராம் எடையில் பிறந்த ஆண் குழந்தையை, ஓசூர் அரசு மருத்துவமனையில் 81 நாட்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து மருத்துவர்கள் காப்பாற்றினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் பெட்டமுகிலாளம் மலைக் கிராமத்தை சேர்ந்த விவசாயி பசப்பா (33). இவரது மனைவி மாதேவி (30), இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பிணியான மாதேவிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி வீட்டிலேயே, 7-வது மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில் குழந்தை பிறந்ததால், குழந்தையின் எடை 830 கிராம் மட்டுமே இருந்தது.

இதனால் அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையை அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. குழந்தையால் தாய்ப்பால் குடிக்க முடியாமல் மிகவும் சோர்வாக காணப்பட்டது. அதனால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.


குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த மருத்துவர்கள்.

இதையடுத்து தலைமை மருத்துவர் பூபதி தலைமையில், மருத்துவர் சக்திவேல் அடங்கிய மருத்துவக் குழுவினர் இங்குபேட்டர், வாமர் போன்றவற்றில் வைத்து, தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் குழந்தைக்கு இருமுறை ரத்தம் ஏற்றப்பட்டது. 81 நாட்கள் தொடர் கண்காணிப்பில் இருந்த குழந்தை, ஒரு கிலோ 250 கிராம் வரை எடை அதிகரித்ததால், தாய்ப்பால் குடிக்கத் தொடங்கியது.

இதனால், குழந்தை மற்றும் தாயை, மருத்துவர்கள் நேற்று வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது வாரம் ஒருமுறை வந்து குழந்தையை காட்டிச் செல்ல வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு 855 கிராம் எடையில் பிறந்த குழந்தைக்கு தொடர் சிகிச்சையளித்த மருத்துவர்கள், அக் குழந்தை ஒரு கிலோ 240 கிராம் எடை வரை அதிகரிக்க செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT