கார்ட்டோசாட் - 3 உட்பட 14 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு பணிகளுக்கு அதிநவீன கார்ட்டோசாட் - 3 செயற்கைக்கோளை வடிவமைத்துள் ளது. இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் ஆந்திரா மாநிலத்தின் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் ஏவுதளத்தில் இருந்து இன்று (நவ.27) காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ராக்கெட் ஏவுதலுக்கான 26 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று காலை 7.28 மணிக்கு தொடங்கியது. கார்ட்டோசாட் 1,625 கிலோ எடை கொண்டது. இது புவியில் இருந்து 509 கி.மீ. உயரத்தில் உள்ள சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இதனுடன் அமெரிக்காவின் என்எஸ்டிஎல் நிறுவனத் துக்குச் சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள் களும் வணிகரீதியாக விண்ணில் ஏவப்படுகின்றன. கார்ட்டோசாட் முழுவதும் புவி கண்காணிப்பு மற்றும் ராணுவ பாதுகாப்புக்கு பயன்படும். இதிலுள்ள 3டி கேமராக்கள் உள்ளிட்ட கருவிகள் அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் மிக துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டவைகளாகும். இதன்மூலம் நாட்டின் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவல், எதிரிகளின் ராணுவ நிலைகள் மற்றும் பதுங்கு குழிகளை கண்காணிக்க முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.