தமிழகம்

மருந்துக்கு பயன்படும் சுறா மீனின் துடுப்புகள் சிங்கப்பூருக்கு கடத்தல்: விமான நிலையத்தில் பயணி கைது

செய்திப்பிரிவு

சென்னையிலிருந்து சிங்கப்பூா் செல்லவிருந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள மருந்துக்கு பயன்படும் சுறா மீனின் வால்கள் மற்றும் செதில்களை கடத்த முயன்ற திருச்சியை பயணியை விமான நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் பிடித்து கைது செய்தனர்.

சென்னை விமான நிலைய நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளுக்கு மருந்துக்குப் ப்யன்படும் தடை செய்யபட்ட அரிய சுறா மீனின் செதில்கள், வால், துடுப்புகளை வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து விமான நிலைய நுண்ணறிவுப்பிரிவினர் பயணிகளை கண்காணித்தனர். அப்போது ஒரு பயணி சந்தேகம் ஏற்படுத்தும் வண்ணம் அட்டைப்பெட்டியை எடுத்துச் செல்ல அவரை அழைத்து விசாரித்தனர். அவர் பெயர் தா்பாா் லத்தீப் (60). திருச்சியைச் சேர்ந்தவர். சிங்கப்பூருக்குச் செல்வதாக தெரிவித்தார்.

அவர் குடியுரிமை சோதனை உள்ளிட்ட அனைத்து சோதனைகளையும் முடித்து விமானத்தில் ஏறச் சென்றுக்கொண்டிருந்தார். அவரது கையிலிருந்த பார்சல் கார்கோவில் போட்ட பார்சலை சோதனை செய்தபோது அதில் வெளிநாட்டு ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட அழிந்துவரும் அரியவகை சுறா மீனின் செதில்கள், வால், துடுப்புகள் இருந்தன. மொத்தம 14 கிலோ இருந்தது. அதன் மதிப்பு ரூ. 8 லட்சம் ஆகும்.

அவற்றை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா். இவைகளை கொண்டு சூப் தயாரிப்பார்கள். இவைகள் உயர் ரக ஸ்டாா் ஓட்டல்களில் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படும்.இந்த வகையான சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதால் சீனாவில் இந்த வகை சூப் பிரபலமானது. இந்த மீன்கள் நமது நாட்டில் அழிந்துவரும் ஒரு இனம் என்பதால், மத்திய அரசு இதை வெளிநாடுகளுக்கு கடத்த தடைவிதித்துள்ளது.
எனவே கைது செய்யப்பட்டுள்ள பயணியை சுங்கத்துறையினா் தீவிரமாக விசாரிக்கின்றனா். அதோடு இது கடல்வனத்துறை சம்பந்தப்பட்டவை என்பதால் சென்னையில் உள்ள மத்திய வனக்குற்றப்பிரிவுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவா்களும் விசாரணை நடத்துகின்றனா்.

SCROLL FOR NEXT