தமிழகம்

‘தல அஜித் மன்னிக்கணும்’: ‘அஜித் அதிமுக’ பேனர் வைத்த ரசிகர் காணொலி மூலம் விளக்கம்

செய்திப்பிரிவு

மதுரையில் அஜித் திமுக (அதி முக) எனப் பொருள்படும்படி பேனர் வைத்து அதிமுகவுக்கு அஜித் ஆதரவா? என சர்ச்சை எழக் காரணமாக இருந்த ரசிகர், தல அஜித் என்னை மன்னிக்க வேண்டும் என்று காணொலி வெளியிட்டு மன்னிப்பு கோரியுள்ளார்.

தமிழக அரசியல் கடந்த ஒரு வாரமாக கடுமையாக சூடு பிடித்துள்ளது. ரஜினியும் கமலும் அரசியலில் இணைய வேண்டும், என் மகன் விஜய்யும் உடன் இணைவார் என எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியிருந்தார். ரஜினி கமல் இணைவார்களா என ஊடகங்கள் இதுகுறித்து விவாதத்தைக் கிளப்பின.

ரஜினியும் கமலும் தேவைப்பட்டால் இணைந்து செயலாற்றுவோம் என்று தெரிவிக்க இந்த விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. ரஜினி, கமல் உடன் விஜய்யும் இணைவார் என்றெல்லாம் ஹேஷ்யங்கள் கிளப்பப்பட்டன. இதற்கு ஏற்றார்போல் ரஜினி 2021-ல் மக்கள் ஒரு அதிசயத்தை நிகழ்த்துவார்கள் என்று தெரிவிக்க அதை ஒட்டி முதல்வர் பழனிசாமி ரஜினிக்குப் பதிலளிக்க மீண்டும் விவாதம் சூடு பிடித்தது.

ஆனால் இந்த விவாதத்தில் சிக்காத நடிகர் அஜித் மட்டுமே. அரசியலுக்குள் வர விரும்பாமல் அஜித் ஒதுங்கிச் செல்கிறார். ஆனால் அவரையும் அரசியலுக்குள் இழுக்கும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டார் மதுரை ரஜினி ரசிகர் ஒருவர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அதிமுக என எழுதி அஜித் படத்தையும், சின்னதாக கீழே அஜித் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் போட்டு பேனர் அடித்தது சர்ச்சையானது.

மேயர் வேட்பாளராக தான் போட்டியிட உள்ளதாகவும் அதற்கு ஆதரவு அளிக்கவேண்டும் எனக்கேட்டு ‘ரைட்’ சுரேஷ் என்கிற அஜித் ரசிகர் அடித்த போஸ்டர் ஏதோ அஜித் அதிமுகவுக்கு ஆதரவு தருகிறார் என்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்க, பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த ‘ரைட்’ சுரேஷ் தான் செய்த காரியத்துக்கு தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார். அவரது விளக்கத்தைக் காணொலியாக வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''நான் ரைட் சுரேஷ். மதுரையிலிருந்து பேசுகிறேன். அஜித்தின் தீவிர ரசிகன். 20 ஆண்டுகாலமாக அஜித் நற்பணி மன்றத்தில் இருக்கிறேன். ஐந்து நாட்களுக்கு முன்னால் அஜித் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி தொடங்கி மேயராகப் போட்டியிடுகிறேன் என்று விளம்பரத்துக்காக நான் தயார் செய்து முகநூலில் போட்டிருந்தேன்.

அதை ஊடகங்கள் எடுத்து பத்திரிகையில் போட்டு நான் மதுரையில் போஸ்டர் ஒட்டியதாக பேப்பர், புத்தகம் அனைத்திலும் என் பெயரைப் போட்டு அஜித் பெயரை களங்கப்படுத்திவிட்டதாக என் மீது அவப்பெயரை உருவாக்கிவிட்டனர். தயவுசெய்து ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நான் அஜித்தின் வெறித்தனமான ரசிகர்களில் ஒருவன்.

அவருக்காக நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன். அது இங்குள்ளவர்களுக்கு நன்கு தெரியும்.
அவர் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்று நான் செய்யவில்லை. யதார்த்தமாக நான் செய்தது இப்படி ஆகிவிட்டது. அதற்காக முதலில் தல அஜித்திடம் மன்னிப்பு கோருகிறேன்.

தல ரசிகர்களிடமும், முக்கியமாக மதுரை தல ரசிகர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன். நான் யார் மனதையும் புண்படுத்தும் விதத்தில் இதைப் போடவில்லை. நான் எப்போதும் அஜித்தின் பக்தனாகத்தான் இருப்பேன்”.

இவ்வாறு சுரேஷ் கோரியுள்ளார்.

SCROLL FOR NEXT