தமிழகம்

உழவன் செயலியில் 200 ஊராட்சிகள், கூட்டுறவு சங்கங்கள் மாயம்: உர இருப்பு, அதிகாரிகள் ஆய்வை அறிய முடியாததால் விவசாயிகள் அதிருப்தி

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டத்தில் உழவன் செயலியில் 200-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் பெயர்கள் மாயமானதால் உர இருப்பு, வேளாண்மை, தோட்டக்கலை அதிகாரிகளின் ஆய்வை அறிய முடியவில்லை. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.

வேளாண்மை, தோட்டக்கலை அலுவலகங்களுக்கு விவசாயிகள் அலைவதை தவிர்க்கவும், மானியத் திட்டங்களில் முறைகேட்டை தடுக்கவும் கடந்த ஆண்டு ஏப்ரலில் உழவன் செயலியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த செயலி மூலம் மானியத் திட்டங்களை அறிதல் மற்றும் விண்ணப்பித்தல், பயிர் காப்பீடு விபரம், உரங்கள் மற்றும் விதைகள் இருப்பு நிலை, இடுபொருள் முன்பதிவு, வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் குறித்த விபரம், சந்தை விலை நிலவரம், வானிலை முன்னறிவிப்பு போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.

மேலும் வேளாண்மை, தோட்டக்கலை அதிகாரிகள் களஆய்வு செய்வதில்லை என அடிக்கடி புகார் எழுந்தது. இதையடுத்து உதவி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அதிகாரிகள் எந்தந்த நாட்களில் எந்தந்த பகுதிகளை ஆய்வு செய்கிறோம் என்ற விபரத்தை உழவன் செயலியில் பதிய வேண்டும்.

இதனை விவசாயிகள் தெரிந்து கொள்ள செயலியில் மாவட்டம், வட்டாரம், ஊராட்சி பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை தேர்வு செய்தால் அதிகாரிகளின் ஆய்வு குறித்த விபரம் இடம்பெறும்.

ஆனால் அந்த செயலியில் மாநிலம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் பெயர்கள் மாயமாகியுள்ளன. இதனால் அந்த ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள் அதிகாரிகளின் ஆய்வு குறித்த விபரத்தை அறிந்து கொள்ள முடியாதநிலை உள்ளது.

அதேபோல் பல தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் பெயர்களும் மாயமாகியுள்ளன. இதனால் விவசாயிகள் உர இருப்பு விபரத்தை அறிந்து கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதிருப்தி அடைந்தனர்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்டம் மணல்மேடு விவசாயி ராஜா கூறியதாவது: திருப்புவனம் வட்டாரத்தில் 45 ஊராட்சிகள் உள்ளன. ஆனால் உழவன் செயலியில் 29 ஊராட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மேலும் திருப்புவனம் வட்டாரத்தில் கே.பெத்தானேந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இடம்பெறவில்லை.

இதேபோல் மாநிலம் முழுவதும் பல ஊராட்சிகளும், கூட்டுறவு சங்கங்களும் விடுப்பட்டுள்ளன. அவற்றை செயலியில் சேர்க்க வேண்டும், என்று கூறினார்.

SCROLL FOR NEXT