விருதுநகரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 173 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பாத்திமாமேரி விளக்கவுரையாற்றினார். பல்வேறு சங்க நிர்வாகிகள் வாழ்த்துரையாற்றினர்.
சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோன்று கடைசி மாத ஊதியத்தில் 50 சதவிகித ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவூட்டு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் வழங்கப்பட்ட குற்ற குறிப்பானை மற்றும் மாறுதலை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டன.
அதைத்தொடர்ந்து, சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 145 பெண்கள் உள்பட 173 பேரை சூலக்கரை போலீஸார் கைதுசெய்தனர்.