அறுவை சிகிச்சைக்குப் பின் அலுவலகக் கோப்புகளை முதல்வர் நாராயணசாமி பார்வையிட்டுக் கையொப்பமிடத் தொடங்கினார்.
கடந்த 25-ம் தேதி அன்று மூட்டுவலி காரணமாக, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் சிறு அறுவை சிகிச்சை கால் மூட்டில் செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பின் தற்போது முதல்வரின் உடல்நிலை சீராக உள்ளது. இதனையடுத்து, முதல்வர் இன்று (நவ.26) மருத்துவமனையில் அலுவலகக் கோப்புகளைப் பார்வையிட்டுக் கையொப்பமிட்டார். முதல்வரின் உடல்நிலை சீராக உள்ளதால் இன்னும் ஒரிரு தினங்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "முதல்வர் நாராயணசாமி தற்போது பூரண ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம். விரைவில் மருத்துவமனையிலிருந்து புதுச்சேரி திரும்புவார். அவரைக் காண யாரும் சென்னை செல்ல வேண்டாம். தனது நலன் குறித்து விசாரித்த அனைவருக்கும் முதல்வர் தனது நன்றி தெரிவித்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.