சர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றுவதற்கான கால அவகாசத்தை 3 நாட்களுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது.
பொது விநியோகத் திட்டத்தில் தற்பொழுது 10 லட்சத்து 19,491 ரேஷன் அட்டைகள் சர்க்கரை அட்டைகளாக உள்ளன. இந்த ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய அட்டைகளை அரிசி பெறக்கூடிய ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அந்தக் கோரிக்கையை ஏற்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 19-ம் தேதி, சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்யலாம் என உத்தரவிட்டார்.
அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய ரேஷன் அட்டையின் நகலினை இணைத்து, கடந்த 19-ம் தேதி முதல் இன்று (நவ.26) வரை https://www.tnpds.gov.in/ என்ற இணைய முகவரியிலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாகப் பரிசீலனை செய்யப்பட்டு, சர்க்கரை ரேஷன் அட்டைகள், தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், இதற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், இன்னும் பெரும்பாலானோர் ரேஷன் அரிசி அட்டைகளாக மாற்ற கால அவகாசம் கோரியதால், இன்னும் 3 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, வரும் 29-ம் தேதி வரை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.