துண்டிக்கப்பட்ட கை அறுவை சிகிச்சை மூலம் இணைக்கப்பட்ட நிலையில் சிறுவன் மவுலீஸ்வரன். உடன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை டீன் பாலாஜிநாதன், மருத்துவர் ராஜேந்திரன் உள்ளிட்ட மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த மவுலீஸ்வரனின் பெற்றோர். படம்: எஸ்.குரு பிரசாத் 
தமிழகம்

விபத்தில் துண்டிக்கப்பட்ட சிறுவனின் கை அறுவை சிகிச்சை மூலம் இணைப்பு: சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

செய்திப்பிரிவு

சேலத்தில் விபத்தில் மணிக்கட்டில் இருந்து துண்டிக்கப்பட்ட சிறுவனின் கையை, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் இணைத்தனர்.

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை டீன் பாலாஜிநாதன், ஒட்டு அறுவை சிகிச்சை (Plastic Surgery) பேராசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் கூறியதாவது:

சேலம் கந்தம்பட்டியில் டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் கடையில் இருந்த சிலிண்டர் வெடித்ததில், சிலிண்டரின் ஒரு பகுதி அருகிலுள்ள ராமன், சித்ரா தம்பதியின் ஓட்டு வீட்டின் மேற்கூரையை உடைத்துக் கொண்டு கீழே விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த ராமனின் மகன் மவுலீஸ்வரன் (11) கையில் சிலிண்டரின் தகடு விழுந்ததில், அச்சிறுவனின் மணிக்கட்டில் இருந்து கை துண்டிக்கப்பட்டது. மேலும், அவரது தொடை எலும்பு முறிந்தது.

உடனடியாக, துண்டிக்கப்பட்ட கையை, ஒரு பாலித்தீன் கவரில் சுற்றி, அதனை ஒரு ஐஸ் பெட்டிக்குள் வைத்து, அரை மணி நேரத்துக்குள் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவர் ராஜேந்திரன் தலைமையிலான ஒட்டு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சிவகுமார், தனராஜ், கோபாலன், தேன்மொழி, சேதுராஜா, மகேஷ்குமார் ஆகியோரும், மயக்கவியல் மருத்துவர் பிரசாத், எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பார்த்தசாரதி, அருண் ஆனந்த் மற்றும் செவிலியர்கள் என 20 பேர் கொண்ட குழுவினர் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, சிறுவனின் துண்டிக்கப்பட்ட கையை மீண்டும் வெற்றிகரமாக இணைத்தனர். சிகிச்சையில் சிறுவனின் துண்டிக்கப்பட்ட 26 நரம்புகள் மீண்டும் துல்லியமாக இணைக்கப்பட்டது.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் உள்ள ரூ.60 லட்சம் மதிப்புள்ள நுண்ணோக்கி உள்ளிட்ட சிறப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது சிறுவனின் கை மீண்டும் இயங்கும் நிலைக்கு வந்துள்ளது. தொடையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் சிறுவன் முழுமையாக குணமடைந்துவிடுவார்.

இச்சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் வரை செலவு ஏற்பட்டிருக்கும். முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேலம் அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT