தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் காக்கணாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்திய வாணி (61). இவரது மகன் கோபிநாத் தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி பொறியாளராக திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றுகிறார். சத்தியவாணி மகனுடன் திருப்பூரில் வசித்து வருகிறார். உடல்நிலை பாதிப்பு தொடர்பாக அவர் வேலூர் மாவட்டத்துக்கு அவ்வப்போது சென்று சிகிச்சை பெறுவது வழக்கம். அந்த வகையில் மருத்துவமனைக்கு சென்று விட்டு நேற்று பகலில் திருப்பூர் நோக்கி காரில் சத்தியவாணி புறப்பட்டார். உடன் சத்தியவாணியின் சகோதரி அன்புமணி (58), உறவினர் கவிதா (46) ஆகியோரும் சென்றனர். காரை, திருப்பத்தூரைச் சேர்ந்த ஓட்டுநர் ரமேஷ் (40) ஓட்டிச் சென்றார். நேற்று மாலை கார், தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, குஜராத் மாநிலத்தில் இருந்து உடுமலைப்பேட்டைக்கு நூல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி காரை பின்தொடர்ந்து சென்றது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த காரின் மீது ஏறியது. இதில், காரில் இருந்த சத்தியவாணி, அன்புமணி, கவிதா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஓட்டுநர் ரமேஷ் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார்.
இந்த விபத்தால் தேசிய நெடுஞ் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட் டது.