மின்னணு கழிவுப் பொருட்களை பொதுமக்களிடமிருந்து பெறும் திட்டத்தை முதற்கட்டமாக சென்னை அடையாறு மண்டலத்தில் சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு:
“பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒதுக்கப்பட்ட
மின்னணு கழிவுப் பொருட்களை மின்னணு கழிவு சேகரிப்பு மையங்களில் வழங்கலாம்.
சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-170 முதல் 182-க்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து மின்னணு கழிவுகளை பெறுவதற்கு அனைத்து வார்டுகளிலும் பிரத்யேக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்கள் வரும் 30-ம் தேதி (சனிக்கிழமை) வரை செயல்படும். எனவே, சென்னை மாநகராட்சியின் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் வீட்டு உபயோகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட மின்னணு கழிவுப்பொருட்களை மின்னணு கழிவு சேகரிப்பு மையங்களில் பொதுமக்கள் ஒப்படைக்கலாம்.
உபயோகமற்ற கைப்பேசிகள், கைப்பேசி சார்ஜர், டெலிவிஷன் சென்டர், கம்யூட்டர் சிஸ்டம்ஸ், பிரிண்டர்ஸ், கீ போர்டு, மௌஸ், இயர் ஃபோன், டிஸ்கார்டர்டு டெலிபோன்ஸ், ரேடியோ டிரான்ஸிஸ்டர்ஸ், சர்கியூட் போர்ட்ஸ், ஸ்பீக்கர்ஸ், எமர்ஜன்சி சார்ஜர், டிவி ரிமோட், பேட்டரிஸ், பேன்ஸ், ஏர் கண்டிஷனர்ஸ், ஏர் கூலர்ஸ், இன்டக்ஸன் ஸ்டவ்ஸ், ஸ்டெபிளேஸர், இன்வெர்டர்ஸ், மிக்ஸர் கிரைண்டர்ஸ் போன்ற மின்னணு கழிவுப் பொருட்களை மின்னணு கழிவு சேகரிப்பு மையங்களில் வழங்கலாம்.
இதேபோன்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் மின்னணு கழிவுப் பொருட்களை சேகரிக்கும் மின்னணு கழிவு சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, மின்னணு கழிவுப் பொருட்களை சேகரிக்கும் நாட்கள் குறித்து பிறகு அறிவிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது”.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.