தமிழகம்

சொகுசு வாழ்க்கை வாழ தொடர் திருட்டு: பொறியியல் பயிலும் காதலர்கள் கைது

செய்திப்பிரிவு

சொகுசு வாழ்க்கை வாழ திருடிவந்த காதலர்கள் கண்காணிப்பு கேமரா பதிவால் சிக்கினர். இருவரும் பொறியியல் படிப்பு படித்துவரும் நிலையில் சொகுசாக வாழ்க்கை நடத்த திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சென்னை வளசரவாக்கம் அருகில் உள்ள காரம்பாக்கம் செங்குட்டுவன் தெருவில் வசிப்பவர் ஜெகதீஷ்(36).இவருடைய மனைவி ரேவதி(32). கடந்த 21-ம் தேதி ஜெகதீஷ், ரேவதி தம்பதி வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டிலிருந்த 4 சவரன் நகை திருடு போனது.இதுகுறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஜெகதீஷ் புகார் அளித்தார்.

புகாரைப்பெற்ற வளசரவாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். நகைத் திருட்டுப்போன ஜெகதீஷ் வீடு அமைந்துள்ள தெருவில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அந்தப்பதிவில் ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் ஜெகதீஷ் வீட்டில் இருந்து வெளியே வரும் காட்சி பதிவாகி இருந்தது.

சிசிடிவி காட்சிகளை வைத்து ஜெகதீஷ் மற்றும் ரேவதியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை பார்த்த ஜெகதீஷ் அதிர்ந்து போனார். சார் இவர்கள் என்னுடைய உறவினர் என்று தெரிவித்தார். அவர்கள் பெயர் கார்த்திக் (23) மற்றும் நித்யா (22) என தெரிவித்தார்.

இருவரும் குன்றத்தூரில் உள்ள கல்லூரியில் பொறியியல் படித்து வருவதாகவும், இருவரும் காதலர்கள் என்று தெரிவித்துள்ளார். இருவரையும் வளசரவாக்கம் போலீஸார் ஸ்டேஷனுக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெகதீஷ் வீட்டில் நகையைத் திருடியது நாங்கள்தான் என ஒப்புக்கொண்டனர்.

கல்லூரியில் படித்து வரும் தாங்கள் தங்கள் செலவுக்காகவும், சொகுசு வாழ்க்கை வாழவும் திருட்டுத் தொழிலை தேர்வு செய்ததாகவும், பல வீடுகளில் ஆளில்லாத நேரத்தில் நுழைந்து திருடியதாகவும் தெரிவித்துள்ளனர். இருவரும் ஜோடியாக வீட்டிற்குள் நுழையும்போது வீட்டில் யாராவது இருந்து கேள்விக்கேட்டால் முகவரி தேடி வரும் தம்பதிபோல் பேசுவார்களாம். இதனால் யாரும் சந்தேகப்படமாட்டார்கள்.

இதை வசதியாக பயன்படுத்திக்கொண்டு திருடி வந்துள்ளனர். இதேப்போன்று ஏற்கெனவே ஒரு உறவினர் வீட்டில் திருடும் போது கையுங்களவுமாக பிடிபட்டதாகவும், படிப்பு, இளம் வயதை கருத்தில்கொண்டு அவர்கள் எச்சரித்து அனுப்பியதாகவும் விசாரணையில் இருவரும் தெரிவித்துள்ளனர்.

சொகுசு வாழ்க்கை வாழ படிக்கும் காலத்திலேயே திருடும் வாழ்க்கையை தேர்வு செய்து சிக்கிய கல்லூரி காதல் ஜோடியை போலீஸார் கைது செய்து வேறு எங்கெல்லாம் திருடியுள்ளனர் என விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT