தமிழகம்

தோழியின் ஆத்திரம்: பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட காவலர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஒன்றாக வாழ்ந்த காவலர் வேறு பெண்களுடனும் தொடர்பில் இருந்ததால், ஆத்திரமடைந்த தோழி பெட்ரோலை ஊற்றி எரித்தார். இதனால் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த காவலர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

ஆவடியில் 2-வது பட்டாலியனில் காவலராக இருந்தவர் வெங்கடேசன் (31). ஆவடி திருமுல்லைவாயல் எஸ்.எம்.நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். வெங்கடேசன் சில ஆண்டுகளுக்கு முன் ஜெயா எனும் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் புளியந்தோப்பைச் சேர்ந்த ஆஷா (31) என்ற பெண்ணுடன் வெங்கடேசனுக்கு கூடா நட்பு ஏற்பட்டது. இதுகுறித்து தெரியவந்ததும் மனைவி ஜெயா கண்டித்து வந்துள்ளார். தொடர்பைக் கைவிடாததால், மனைவி ஜெயா கோபித்துக்கொண்டு தனது மகனுடன் பிரிந்து தனது தாய்வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

இது வெங்கடேசனுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. கணவரைப் பிரிந்து வாழ்ந்த ஆஷாவை தனது குடியிருப்புக்கு அழைத்து வந்த வெங்கடேசன் அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இப்படியே உறவு சென்ற நிலையில் வெங்கடேசனுக்கும் ஒரு பெண் காவலருக்கும் திடீரென கூடா நட்பு ஏற்பட்டுள்ளது.

புதிதாக ஏற்பட்ட கூடா நட்பு வெங்கடேசனுடன் குடும்பம் நடத்தும் ஆஷாவுக்குத் தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்தவர் வெங்கடேசனுடன் சண்டை போட்டுள்ளார். இன்னொரு பெண்ணுடனான கூடா நட்பை விட்டுவிடுவதாக வெங்கடேசன் ஆஷாவிடம் தெரிவித்ததால் சில மாதங்கள் அமைதியாகக் கழிந்தன. ஆனால் வெங்கடேசனால் புதிய நட்பை விட முடியவில்லை.

இந்த விவகாரம் தோழி ஆஷாவுக்கு மீண்டும் தெரியவந்ததால் அவர் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். தொடர்ந்து வெங்கடேசனுடன் சண்டையிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அதிகாலை வரை தகராறு நீடித்துள்ளது.

அதிகாலையில் வெங்கடேசன் உறங்கிவிட்டார். ஆனால் ஆத்திரம் தீராத ஆஷா வீட்டிலிருந்த பெட்ரோல் கேனிலிருந்து பெட்ரோலை வெங்கடேசன் மீது ஊற்றியுள்ளார். தூக்கத்திலிருந்த அவர் சுதாரித்து எழுந்திருப்பதற்குள் சட்டென்று தீ வைத்துள்ளார்.

உடலெங்கும் தீப்பிடித்ததால் வெங்கடேசன் எழுந்து அங்குமிங்கும் ஓடி கீழே விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்துள்ளனர். தீக்காயத்துடன் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த வெங்கடேசன் ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பெட்ரோல் ஊற்றி ஆஷா தீ வைத்ததாக வெங்கடேசன் வாக்குமூலம் கொடுத்ததை அடுத்து திருமுல்லைவாயல் போலீஸார் ஆஷாவைக் கைது செய்தனர். அவர் மீது ஐபிசி 307-ன் கீழ் (கொலை முயற்சி) வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

83 சதவீத தீக்காயத்துடன் உயிருக்குப் போராடிய நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வெங்கடேசன் இன்று காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து திருமுல்லைவாயல் போலீஸார் வழக்கை ஐபிசி 302 (கொலை) பிரிவுக்கு மாற்றினர்.

முறையான குடும்ப வாழ்க்கையை மறந்து, பிள்ளைகள் நலனைக் கவனிக்காமல் முறையற்ற வாழ்க்கை காரணமாக அடுத்தடுத்து தேவையற்ற தொடர்பு காரணமாக வெங்கடேசனின் உயிரே போய்விட்டது என உறவினர்கள், நண்பர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT