உயர் நீதிமன்றம்: கோப்புப்படம் 
தமிழகம்

கிறிஸ்தவத் திருமணங்களைப் பதிவு செய்து சான்றிதழ் வழங்கக் கோரி மனு: தமிழக பதிவுத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

கிறிஸ்தவத் திருமணங்களைப் பதிவு செய்து சான்றிதழ் வழங்கக்கூடிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி தமிழக பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‌தமிழகம் முழுவதும் உள்ள பிஷப்புக்களும், பாதிரியார்களும் இந்திய கிறிஸ்தவச் சட்டத்தின்படி கிறிஸ்தவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். இந்தத் திருமணங்களைப் பதிவு செய்து சான்றிதழ் வழங்க பதிவுத்துறைக்கு உத்தரவிடக் கோரி வேலூரை சேர்ந்த பிஷப் நோகா யோவனராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கிறிஸ்தவத் திருமணங்களைப் பதிவு செய்ய பதிவுத்துறை மறுக்கிறது என்றும், இதுதொடர்பாக தான் அனுப்பிய மனுக்களுக்கு எந்த பதிலும் இல்லை என்பதால் தனது மனுவைப் பரிசீலித்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

‌இந்த மனு, இன்று (நவ.25) நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

‌கிறிஸ்தவர்களுக்கு நடத்தபட்ட திருமணம் குறித்து சம்பந்தப்பட்ட திருச்சபைகள் அனுப்பி வைக்கும் சான்றிதழ்களை பதிவுத்துறை பராமரிக்க மட்டுமே செய்வதாகவும், அதனைப் பதிவு செய்வது இல்லை எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், மனு தொடர்பாக டிசம்பர் 6-ம் தேதி பதிலளிக்கும் படி, தமிழக பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT