திராவிடக் கட்சிகளிடம் இருந்து மக்கள் விடுபடுவதுதான் தமிழகத்திற்குப் பொற்காலம் என, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
துக்ளக் இதழின் பொன்விழா சிறப்புக் கூட்டம் திருச்சியில் நேற்றிரவு (நவ.24) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தமிழருவி மணியன், தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது என்பது உண்மைதான் எனக்கூறினார். தன் மூச்சு முடிவதற்குள், தமிழகத்தில் இருந்து திராவிடக் கட்சிகள் அகற்றப்பட வேண்டும் என்பதே தன் எண்ணம் என குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் அதிமுக ஆட்சியைக் கலைத்துவிட்டு, ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வந்தால், தமிழகத்தில் பாஜக தானாக வளர்ந்துவிடும் என்று பேசினார்.
இது தொடர்பாக தமிழருவி மணியன் மேலும் கூறுகையில், "இந்த ஆட்சி கலைந்தால் பிறகு ஆளுநர் ஆட்சி வரும். ஆறு மாத காலம் ஆளுநர் இருப்பார். ஆளுநர் ஆட்சி என்றால் பாஜக ஆட்சிதானே. மோகன்லால் சுக்காரியா ஆளுநராக இருந்த காலத்திலிருந்து நான் அரசியலைப் பார்த்தவன். அன்றைக்கு இந்திரா காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஆளுநர் மாளிகையில் தான் உட்கார்ந்திருந்தனர். எனவே ஆளுநர் ஆட்சி இருந்தால், எந்தக் கட்சி மத்தியில் ஆள்கிறதோ, அதனைச் சார்ந்த கட்சியில் உள்ளவர்களெல்லாம் அங்கு செல்லலாம்" என்று பேசினார்.