சிறுவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த திறந்தவெளி கிணறு | படம்: எம்.நாகராஜன். 
தமிழகம்

3 சிறுவர்கள் உயிரிழந்த பிறகும் மூடப்படாத திறந்தவெளிக் கிணறு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை 

செய்திப்பிரிவு

3 சிறுவர்கள் உயிரிழப்புக்கு காரணமான சுற்றுச் சுவர் இல்லாத கிணறு இன்னும் அதே நிலையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உடுமலை அருகே கணியூர் பேரூராட்சியில் தனியாருக்கு சொந்தமான லே அவுட்டில் தரைமட்ட கிணறு உள்ளது. இந்த லே அவுட்டில் ஓரிருவர் மட்டுமே வீடு கட்டி குடியிருந்துவருகின்றனர். இதனையொட்டி உள்ள மதியழகன் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் அப் பகுதி யில் நடைபெற்ற உறவினர் திருமணத்துக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது மாணவர்கள் சந்தோஷ், அஜய், ஜீவா ஆகிய மூவரும் விளையாடச் சென்றபோது பாதுகாப்பில்லாத கிணற்றில் தவறி விழுந்து உயிரி ழந்தனர். இச்சம்பவத்தால் பாதிக்கப் பட்ட உறவினர்கள் சாலைமறியல், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இச் சம்பவம் பலராலும் மறக்கப்பட்ட நிலையில், 3 உயிர்களை காவு வாங்கிய கிணறு இன்னும் அதே நிலையில் இருப்பது அப்பகுதி மக்களை கவலையடையச் செய்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் நீர் ததும்பிய நிலையில் உள்ளது. தரைமட்ட அளவில் உள்ள இக்கிணற்றுக்கு கைப்பிடிச் சுவர் கிடையாது. கணியூர்-காரத்தொழுவு சாலை யில் இருந்து சிலர் இயற்கை உபாதைகளுக்காக சென்று விட்டு ஆபத்தான கிணற்றில் உள்ள நீரை பயன்படுத்தி வருகின்றனர். விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் அங்கு கிரிக்கெட், கபடி என விளையாடி வருகின்றனர்.

ஏற்கெனவே 3 சிறுவர்கள் பலியான சம்பவம் அந்த கிணற்றை கடந்து செல்வோருக்கு மரணக் கிணறாகவே நினைவூட்டி வருகிறது. இனிமேலும் யாருக்கும் எந்த பாதிப்பும் நேராமல் தடுக்க பாதுகாப்பான முறையில் சுற்றுச் சுவர் அல்லது தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மாணவர்கள் இறந்தபோது இதுகுறித்து பரபரப்பாக இயங்கிய அரசு நிர்வாகம் அதன் பின் 7 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்றனர்.

எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SCROLL FOR NEXT