சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வானிலை அதிகாரிகளுக்கு புயலை கணிப்பது குறித்து பயிற்சி அளிக்க இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் இன்று ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
ஜப்பான் நாட்டின் வானிலை ஆய்வு மையம் சார்பில், சீனா, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுக்கான புயல் கணிப்பு தொடர்பான பயிலரங்கம் டோக்கியோவில் நாளை (நவ.26) முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.
உலகின் பல்வேறு பகுதிகளில் மோசமான வானிலையை எதிர்கொண்ட வானிலை வல்லுநர்கள் இதில் பயிற்சி அளிக்க உள்ளனர். அந்த பயிலரங்கில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் பங்கேற்று பயிற்சி அளிக்க உள்ளார்.
இந்த பயிலரங்கையொட்டி, ஜப்பான் மற்றும் இந்தியா இடையிலான மக்களுக்கான வானிலை சேவையை மேம்படுத்துவது தொடர்பான தொழில்நுட்பங்கள், வழிமுறைகள், இரு நாட்டு ஒத்துழைப்பு, வானிலை தரவுகளை பகிர்ந்துகொள்வது குறித்த விவாத கூட்டத்திலும் பாலசந்திரன் பங்கேற்க உள்ளார். அதற்காக இன்று இரவு அவர் ஜப்பானுக்கு புறப்படுகிறார்.
அண்மைக் காலமாக தென்னிந்திய பகுதிகளில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் உலக வானிலை ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. கடந்த 2015-ம் ஆண்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு லட்சக்கணக்கானோர் தங்கள் உடைமைகளை இழந்தனர். அடுத்த ஆண்டு தாக்கிய வார்தா புயலால் லட்சக்கணக்கான மரங்கள் அழிந்தன.
2017-ம் ஆண்டு வானிலை தரவுகளுக்கு மாறாக குறுகிய காலத்தில் வலுப்பெற்ற ஒக்கி புயலால் ஏராளமான மீனவர்கள் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு கேரள மாநில வரலாற்றில் இல்லாத வகையில் பெருவெள்ளம் ஏற்பட்டு அம்மாநிலமே ஸ்தம்பித்தது. கஜா புயல் தமிழக மாவட்டங்களில் கடும் சேதங்களை விளைவித்து அரபிக் கடலுக்கு சென்றது.
இந்த ஆண்டு அரிதாக மே மாதத்தில் வங்கக் கடலில் ஃபானி புயல் உருவானது. அது ஒடிசாவில் கரையை கடக்கும் என மிகச்சரியாக கணித்து, அப்பகுதி மக்களை 24 மணி நேரத்தில் வெளியேற சரியான நேரத்தில் உரிய அறிவுறுத்தல்களை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல அலுவலகம் வழங்கி இருந்தது.
உலக வரலாற்றில் இல்லாத நிகழ்வாக ஒரே நேரத்தில் அரபிக் கடலில் கியார், மஹா ஆகிய புயல்கள் உருவாயின. இந்த நிகழ்வுகள் உலக வானிலை ஆய்வாளர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இத்தகைய அனுபவத்தை பெற்றிருப்பதால், ஜப்பானில் நடைபெறும் பயிலரங்கில், பல்வேறு நாடுகளின் வானிலை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க பாலசந்திரன் அழைக்கப்பட்டுள்ளார்.