பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எரிபொருள் விற்பனை நிலையங்களில் நவீன மின்னணு முறையில் எரிபொருள் நிரப்பும் செயல்பாடு தொடங்கப்பட்டுள்ளது.
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் (பிபிசிஎல்) எரிபொருள் விற்பனை நிலையங்களில் நவீன டிஜிட்டல் முறையில் எரிபொருள் நிரப்பும் செயல்பாட்டை அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி. ராஜ்குமார் தொடங்கிவைத்தார்.
வெளிப்படைத்தன்மை மற்றும்வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை வளர்ப்பது என்ற நோக்கத்துடன், நவீன தொழில்நுட்பம் கொண்ட டிஜிட்டல் முன்முயற்சிகளைப் பயன்படுத்தி, எரிபொருள் நிரப்பும் முறை தொடங்கி வைக் கப்பட்டுள்ளது.
இந்த நவீன முறையின் மூலம் டேங்கர்கள் வழியாக பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எரிபொருள் நிலையங்களுக்குத் தரமான, சரியான அளவில் எரிபொருள் விநியோகிப்பது 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எரிபொருள் நிலையத்துக்குச் சென்று எரிபொருளை வெளியேற்றும்போது மட்டுமே எலக்ட்ரானிக் பூட்டு திறக்கும் வகையில் நவீன ஜியோபென்சிங் தொழில்நுட்பம், இந்த டேங்கர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வளவு எரிபொருள் வழங்கப்பட்டதோ அதற்கு மட்டும் தாமாகவே ரசீது உருவாக்கப்பட்டு, பணம் செலுத்துவதற்கான டிஜிட்டல் முறை ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால், 100 சதவீத பாதுகாப்பு கிடைத்துள்ளது.
ஒவ்வொரு முறை எரிபொருள் இறக்கப்படும்போதும், பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர் களுக்கு தாமாகவே எஸ்எம்எஸ் அனுப்புதல் போன்ற வசதிகள் இதில் செய்யப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் புதியவசதி டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு பாரத் பெட்ரோலியம் நிறுவன செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.