கோப்புப்படம் 
தமிழகம்

மனஅழுத்தத்தை போக்குவதற்கான சிறப்பு பயிற்சி மூலம் உளவியல் ஆலோசகர்களாகும் ஆசிரியர்கள்: கற்றல் திறனை மேம்படுத்த சென்னை மாநகராட்சியின் புது முயற்சி

செய்திப்பிரிவு

குடும்பச் சூழல் உள்ளிட்ட புறச்சூழல்களால் பாதிக்கப்பட்டு மனஅழுத்தத்துக்கு உள்ளாகும் பள்ளி மாணவர்களை கண்டறிந்து அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 90 ஆயிரம் மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். 3 ஆயிரம் ஆசிரியர், ஆசிரியைகள் பணிபுரிகின்றனர்.

மாநகராட்சி பள்ளிகள் பொதுத்தேர்வில் 98 சதவீதம் தேர்ச்சி காட்டினாலும் மாநில அளவிலான ரேங்க் பட்டியலில் இடம்பிடிப்பதில்லை. இதனால் ‘ஸ்பார்க்' என்ற திட்டத்தை தொடங்கி, மாணவர்களுக்கு இருவேளை உணவு மற்றும் சிற்றுண்டியுடன் கூடிய பயிற்சி அளித்தது. இருப்பினும் எதிர்பார்த்த பலன் இல்லை. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் குறைய உளவியல் பிரச்சினை காரணமாக இருக்கும் என கணித்த கல்வித் துறை அவற்றில் இருந்து மாணவர்களை மீட்க முயற்சி எடுத்தது.

இதன்படி, இதற்கான சிறப்பு பயிற்சியை ஆசிரியர்களுக்கு வழங்கி வருகிறது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சி பள்ளி மாணவர்களின் பெற்றோர் பெரும்பாலும் தினக்கூலி அடிப்படையிலான உடலுழைப்புத் தொழிலாளர்களாக உள்ளனர்.

அதனால் குழந்தைகளை கவனிப்பதில் சிரமம் உள்ளது. சில குடும்பங்களின் தலைவர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களாக இருப்பது, குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நடப்பது, பெற்றோர் இல்லாதவர்களாக, தந்தையை பிரிந்த தாயுடன் வசிப்பவர்களாக குழந்தைகள் இருப்பார்கள். இதுதவிர அக்கம் பக்கத்தினரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியும் இருப்பார்கள். இதுபோன்ற புறக்காரணிகளால் இந்தக் குழந்தைகள் மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் கற்பதில் கவனம் சிதறுகிறது.

தங்களுக்கான பிரச்சினைகளை பெற்றோரிடம் குழந்தைகளால் மனம்விட்டு பேச முடிவதில்லை. இதனால் மனஅழுத்தத்துக்கு உள்ளாகி படிப்பதில் நாட்டம் குறைகிறது. இத்தகைய மாணவர்களிடம் மனம்விட்டு பேசி பிரச்சினைக்கான காரணங்களை கண்டறிந்து, அதிலிருந்து அவர்களை மீட்டு, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த வேண்டியது ஆசிரியர்களின் பொறுப்பாகும். இதற்கான பயிற்சியைத்தான் ஆசிரியர்களுக்கு அளித்து வருகிறோம்.

முதல்கட்டமாக மாநகராட்சியின் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 250 இடைநிலை ஆசிரியர்களுக்கு, குழந்தை உளவியல் சிறப்பு மருத்துவர்கள் மூலமாக பயிற்சியளித்து வருகிறோம். அந்த பயிற்சியில், “கல்வி கற்க நாட்டம் இல்லாத மாணவர்களை ஒதுக்கக் கூடாது.

புறச்சூழலால் அவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளானவர்களை மீட்க ஒவ்வொரு ஆசிரியரும் உளவியல் ஆலோசகராக செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பயிற்சி படிப்படியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும். இந்த நடவடிக்கைகள் மூலம் மாணவர்களின் கற்றல் குறைபாடு களையப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT