கோப்புப்படம் 
தமிழகம்

சென்னையில் மீண்டும் ‘பைக் ரேஸ்’ - அதிவேகமாக மோதி 2 பேர் படுகாயம்

செய்திப்பிரிவு

சென்னை மெரினா மற்றும் ராதாகிருஷ்ணன் சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களின் வாகனம் மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் அதிக இன்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுடன் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென கூடினார்கள். பின்னர், மெரினா சாலையில் வண்டியின் முன்புற சக்கரத்தை தூக்கியபடி சாகசத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மெரினா, அடையாறு பாலம், ஆர்.கே.சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபட்டனர். காதைக் கிழிக்கும் சப்தத்துடன் அவர்கள் சென்றது மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பைக் ரேஸின்போது, ஆர்.கே.சாலையைக் கடக்க முயன்ற இருவர் மீது இருசக்கர வாகனம் ஒன்று மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ரஹ்மான் மற்றும் அவரது நண்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மோதிய இருசக்கர வாகனம் இரு துண்டுகளாக உடைந்து போனது. விபத்தை ஏற்படுத்திய இளைஞரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பைக் ரேஸ் முற்றிலும் நடைபெறாமல் தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

SCROLL FOR NEXT