சட்டப்பேரவையிலிருந்து 3-வது நாளாக திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக சட்டப்பேரவை குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, ஒரு பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்டார்.
அதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர் பி. தனபால், ‘‘விதி 110-ன் கீழ் அறிக்கை அளிக்க முதல்வர் ஜெயலலிதா அனுமதி கேட்டுள்ளார். அவர் அறிக்கை அளித்த பிறகு பேச வாய்ப்பளிக்கிறேன்’’ என்றார். அதனைத் தொடர்ந்து ஸ்டாலின் அமர்ந்தார்.
முதல்வர் அறிக்கை அளித்த பிறகு எழுந்த ஸ்டாலின், ஒரு பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர், ‘‘முதல்வர் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து பேச உறுப்பினர்கள் விரும்புகின்றனர். அதன் பிறகு நீங்கள் பேசலாம்’’ எனக் கூறி செ.கு.தமிழரசனை (இந்திய குடியரசு கட்சி) பேச அழைத்தார்.
சபாநாயகர் வருத்தம்
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய் தனர். அப்போது பேசிய பேரவைத் தலைவர் பி தனபால், ‘‘பேச வாய்ப்பு தருகிறேன் என கூறிய பிறகும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது துரதிருஷ்டவசமானது. இதற்கு எனது வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன்’’ என்றார்.
முதல்வரின் அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவித்து செ.கு.தமிழரசன், உ.தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), ஆர்.சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி) அமைச்சர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், என்.சுப்பிரமணியன் ஆகியோர் பேசினார்கள்.
அவர்கள் பேசி முடித்ததும் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.விஜய தாரணி, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கே.கிருஷ்ணசாமி ஆகியோர் எழுந்து ஒரு பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிகளின் உறுப்பினர்கள் 3-வது நாளாக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.