தமிழகம்

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கரூர் மாவட்ட ஆசிரியர்கள் 2 பேர் தேர்வு

க.ராதாகிருஷ்ணன்

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வாகி உள்ளனர்.

ஆசிரியர் தினத்தையொட்டி மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து நல்லாசிரியர் விருதுகளை வழங்கி வருகிறது. நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தின் தொடக்கப் பள்ளிகளில் இருந்து 15, உயர், மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 7 என 22 ஆசிரியர்கள் தேர்வு பெற்றுள்ளனர். இதில் 2 ஆசிரியர்கள் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

கரூர் நரிக்கட்டியூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.விஜயலலிதா (48). நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார். கரூரைச் சேர்ந்த இவர் 1990-ம் ஆண்டு ஆசிரியை பணியில் சேர்ந்தார். 2001-ம் ஆண்டு தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்றார். தற்போது பணிபுரியும் நரிக்கட்டியூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாக 2002-ம் ஆண்டு பொறுப்பேற்றார்.

அவர் இப்பள்ளியில் பணியில் சேர்ந்தபோது மாணவர் எண்ணிக்கை 5. பள்ளி மூடும் நிலையில் இருந்தது. இதையடுத்து விஜயலலிதாவின் கடும் முயற்சியால் மாணவர் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கச் செய்தார். மேலும், பள்ளிக்கு கட்டிட வசதி, டைல்ஸ், மின்விசிறி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பள்ளியைத் தூய்மையாகப் பராமரித்தல் ஆகியவற்றை மேற்கொண்டார்.

இவரது பணியைப் பாராட்டி 2011-ம் ஆண்டு மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இவர் பணி மேலும் சிறக்கும் வகையில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார். தனது உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக இதனைக் கருதுவதாக அவர் தெரிவித்தார்.

இதேபோல, கரூர் வெண்ணெய்மலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் வி.பழநியப்பன்(51). தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார். தமிழகத்தில் இருந்து உயர், மேல்நிலைப் பள்ளிகள் பிரிவில் 7 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மெட்ரிகுலேஷன் பிரிவில் இவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT