அமைச்சர், எம்எல்ஏவைப் பாராட்டி ஒட்டப்பட்டுள்ள அதிமுக போஸ்டர். 
தமிழகம்

மதுரை விரிவாக்கப் பகுதியில் அரசு நலத்திட்டங்கள் நிறைவேற்றியது யார்?- அதிமுக, திமுகவில் நிலவும் போஸ்டர் போட்டி

செய்திப்பிரிவு

எஸ்.ஸ்ரீனிவாசகன்

மதுரை விரிவாக்கப்பகுதியில் அரசு நலத் திட்டங்கள் நிறைவேறக் காரணம் அதிமுகவா?, திமுகவா? என கட்சியினரிடையே சுவரொட்டி போட்டி நிலவுகிறது.

மதுரை மாநகராட்சி 72 வார்டு களுடன் இருந்தது. இதனுடன் விரிவாக்கப் பகுதியிலுள்ள 28 வார்டுகள் இணைக்கப்பட்டு 8 ஆண்டுகளாகிவிட்டன. எனினும், இதுவரை பாதாள சாக்கடை, குடிநீர், சாலைகள் என எந்தவித அடிப்படை வசதிகளும் நிறைவேற் றப்படவில்லை. சில பகுதிகளில் மட்டும் தெரு விளக்குகள், சாலை கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் வரி உயர்வு, பாதாளச் சாக்கடை இணைப்புக்கு வைப்புத் தொகை வசூல், வரைபட அனும திக்கு கடுமையான கட்டணம் வசூல் ஆகியவற்றில் மட்டும் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், மதுரை கிழக்குத் தொகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள் வைகை பாசன தண்ணீரால் நிரம்பியுள்ளன. இப்பகுதியில் உள்ள 15 வார்டுகளுக்கு பாதாளச் சாக்கடை அமைக்க ரூ.293 கோடி, மூன்று மாவடி-ஆனையூர் விரிவாக்க சாலைக்கு ரூ.50 கோடி, பாசனக் கால்வாய் கட்ட ரூ.17 கோடி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

பாதாளச் சாக்கடை அமைப்பதற்காக கிழக்குத் தொகுதி திமுக எம்எல்ஏ. பி.மூர்த்தி அப்பகுதியில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட குடியிருப்போர் சங்கங்களைத் திரட்டி உண்ணாவிரதம், ஆர்ப் பாட்டம் எனத் தொடர் போராட் டங்களை நடத்தினார். இதனால் குடியிருப்போர் சங்கத்தினர் வரும் 30-ம் தேதி மூர்த்திக்குப் பாராட்டு விழா நடத்த உள்ளனர். மேலும் கண்மாய்க்குத் தண்ணீர் கொண்டுவர ஆண்டுதோறும் உதவி வரும் மூர்த்திக்கு நன்றி தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதையறிந்த அதிமுகவினர் திமுகவுக்குப் போட்டியாகக் களம் இறங்கினர். திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கிய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோ ருக்கு நன்றி தெரிவித்து ஏராளமான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில், தங்களால்தான் இத்திட்டங்கள் வந்தன என்பதை காட்டிக் கொள்வதில் திமுகவினருக்குப் போட்டியாக அதிமுகவினரும் களம் இறங்கியிருப்பது விரி வாக்கப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுகவினர் கூறுகையில், திடீரென சுவரொட்டிகளை அதிமுகவினர் ஒட்டி வருவது உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துத்தான் என்பது தெரிகிறது. இப்பகுதி மக்களுக்கு யாரால் திட்டங்கள் வந்தன என்பது நன்றாகவே தெரியும். அதற்கு ஆதரவாக கடந்த சட்டப் பேரவை, மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியில் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. அதே நிலை உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். இதைத் தடுக்க ஏதாவது வழி கிடைக்காதா எனக் கருதி திடீர் பாசத்தை வெளிப்படுத்தி உள்ளனர் எனத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT