திருநெல்வேலியில் புதிய நீதிமன்ற கட்டிடங்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், அனிதா சுமந்த் ஆகியோர் திறந்து வைத்தனர். அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: மு.லெட்சுமி அருண் 
தமிழகம்

போலீஸார், வழக்கறிஞர்கள் மோதல் சரியல்ல: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

செய்திப்பிரிவு

திருநெல்வேலி

‘போலீஸாரும், வழக்கறிஞர்களும் மோதிக்கொள்வது சரியல்ல’ என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி நீதிமன்றத்தில் மாற்றுமுறை ஆவண சட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், நாங்குநேரியில் ரூ.4.18 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய நீதிமன்ற கட்டிடங்கள், ராதாபுரத்தில் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் ஆகியவற்றின் தொடக்க விழா பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது.

இவற்றை தொடங்கி வைத்து நீதிபதி கிருபாகரன் பேசியதாவது: தாமிரபரணி நதிக்கரையிலும், வைகை கரையிலும்தான் தமிழரின் பழம்பெரும் நாகரிகம் வளர்ந்தது என்று ஆன்றோர் சொல்வார்கள். அதற்கு சான்றாக ஆதிச்சநல்லூர், கீழடி ஆய்வுகள் உள்ளன. நிர்வாகத் துறை, நீதித்துறை, காவல் துறை ஆகியவை இணைந்து மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றன. எங்கு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ, அங்கு இந்த மூன்றும் சரியாக இருப்பதாக பொருள்.

சிலநேரங்களில் நீதிமன்றங்கள் என்றால் வழக்கறிஞர்களின் கோட்டை, காவல்நிலையங்கள் என்றால் காவல் துறையினரின் கோட்டை என்ற தவறான எண்ணம் இருக்கிறது. நீதிமன்றங்களும், காவல் நிலையங்களும் மக்களுக்கானவை. போலீஸாரும் வழக்கறிஞர்களும் மோதிக்கொள்வது சரியல்ல. அவரவர் கடமையைச் செய்ய வேண்டும்.

வழக்கறிஞர்கள் காவல் நிலையங்களுக்கு செல்லாதீர்கள். அதற்கு ஒரு வரன்முறை இருக்கிறது. கட்டப்பஞ்சாயத்து நடைபெறுவதாக கேள்விப்படுகிறோம். நேர்வழியில் வந்தால்தான் பணம் நல்லது. இல்லாவிட்டால் அது கேன்சரை போன்றது.

காவல் துறையினரும், வழக்கறிஞர்களை எதிரிகளாக பார்க்கக் கூடாது. இருவரும் இணைந்து நீதியின்பால் சட்டப்படி செயல்பட்டால் மோதல் வராது. இரு துறைகளிலும் தவறுகள் இருக்கின்றன. அவற்றை களைந்தால்தான் நீதித்துறை நன்றாக இருக்கும்.

இப்போது ஒழுக்கம் என்பது இல்லாமல் போய்விட்டது. வாழ்க்கை நெறிமுறைகள் இல்லாமல் போய்விட்டது. அவை மறுபடியும் வரவேண்டும். குழந்தைகளுக்கு அவற்றை கற்பிக்க வேண்டும். சொந்தக்காரர்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மக்களோடு பேசும் நிலைமாறி இயந்திரங்களோடு பேசும் நிலை உள்ளது.

நீதித் துறையில் பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. இளம் வழக்கறிஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வழக்கறிஞர் தொழில் மாண்புமிக்கது. இந்த மாண்பை காக்க வேண்டும் என்றார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ.நஷீர் அகமது, தலைமை குற்றவியல் நீதிபதி எஸ்.ரவிசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT