கோள வடிவ திரையில் பூமியைப் பற்றிய காட்சிகளை காணும் மாணவர்கள். 
தமிழகம்

பிர்லா கோளரங்கத்தில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன ஒளிப்படக் கருவிகள்: துல்லியமான வானியல் காட்சிகளைக் கண்டு பார்வையாளர்கள் பரவசம்

செய்திப்பிரிவு

சென்னை

சென்னை பிர்லா கோளரங்கத்தில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன ஒளிப்படக் கருவிகள் மூலம் வானியல் காட்சிகள் மிகத் துல்லியமாகக் காட்டப்படுகின்றன.

சென்னை கோட்டூர்புரம் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், தமிழக அரசால் நிறுவப்பட்ட பி.எம்.பிர்லா கோளரங்கம் உள்ளது. வானியல் நிகழ்வுகள் குறித்து பொதுமக்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு சரியான புரிதலை உருவாக்கும் நோக்கில் கடந்த 30 ஆண்டுகளாக இந்த கோளரங்கம் செயல்பட்டு வருகிறது. இதுவரை 60 லட்சம் பார்வையாளர்கள் இந்த கோளரங்க காட்சிகளை கண்டுகளித்துள்ளனர்.

இந்நிலையில் ரூ.10 கோடி செலவில்தற்போது கோளரங்கம் சீரமைக்கப்பட் டுள்ளது. அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளிப்படக் கருவிகள்பிர்லா கோளரங்கத்தில் நிறுவப்பட்டுள்ளன. அதேபோல் கோள வடிவ திரையில் அறிவியல் நிகழ்வுகளை (Science on a Sphere) காணும் மையம் ரூ.2கோடியே 50 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட கோளரங்கத்தின் செயல்பாடுகளை முதல்வர் பழனிசாமி கடந்த 19-ம் தேதி தொடங்கி வைத்தார்.

தற்போதைய கோளரங்கத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் எஸ்.சவுந்தரராஜபெருமாள் கூறியதாவது:

கோளரங்கத்தில் தற்போது உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீனஒளிப்படக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் இரவு வான் காட்சிகளை மிகத் துல்லியமாகக் காண முடியும். கோளரங்கத்தில் நட்சத்திரங்கள், நட்சத்திரக் கூட்டங்கள் மற்றும் அவற்றின் நகர்வுகளைக் காணலாம். சூரியக் குடும்பத்தின் தோற்றம் பற்றியும், ஒவ்வொரு கோள்கள் பற்றியும் விரிவான விளக்கங்களுடன் திரையில் காணலாம்.

அரைக்கோள வடிவ கோளரங்கத்தின் திரையில் இந்தக் காட்சிகளைக் காணும் போது, ஒவ்வொரு கோள்களுக்கும் நேரடியாக சென்றுவந்த அனுபவத்தை உணர முடியும். மேலும் தற்போதைய இரவு வான் காட்சியை அப்படியே காணலாம். அதுமட்டுமின்றி, நம் தலைக்கு மேலே 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தெரிந்த இரவு வான் காட்சியையும், இன்னும் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இரவு வானில் தோன்றவுள்ள காட்சியையும்கூட இந்த கோளரங்க திரையில் கண்டுகளிக்க முடியும். அதாவது எந்த நாட்டிலும், எந்த நேரத்திலும் (கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும், எதிர் காலத்திலும்) காணக் கூடிய இரவு வான் காட்சிகளை காணலாம். தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளிலும் கோளரங்க காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் கோள வடிவிலான திரையில் புவியியல் நிகழ்வுகளைக் காணக் கூடிய கருவியும் பார்வையாளர் களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பெரும்பாலும் நாம் அகன்ற திரைகளில்தான் படங்களைப் பார்த்திருப்போம். இந்த கோள வடிவ திரை பூமிப்பந்து போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்ததிரை நமது முழு பூமியையும் அப்படியே பார்ப்பது போல இருக்கும். இந்த திரைப்பந்தை நகர்த்தி உலகின் அனைத்து நாடுகள், அனைத்து ஊர்களையும் காணலாம்.

உலகின் எந்த ஒரு இடத்தின் தற்போதைய காலநிலை நிலவரங்களையும் அறியலாம். புயல், சுனாமி போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் அவற்றின் நகர்வை துல்லியமாக காணலாம். கடல் நீரோட்டம், உலகின் வெவ்வேறு பகுதிகளில் கடல்நீரின் தட்பவெப்பநிலை போன்றவற்றையும் தெரிந்து கொள்ளலாம். கடலில் தற்போது எந்த இடத்தில் அதிக அளவில் மீன் வளம் உள்ளது போன்ற தகவல்களும் கிடைக்கும். பூமியில் எந்தெந்த இடத்தில் தற்போது காற்றின் மாசு எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியும். விவசாயிகளின் பயிர் சாகுபடி எந்தெந்த இடங்களில் செறிவாக உள்ளது, எங்கு தரிசு நிலம் அதிகமாக உள்ளது, அடர்ந்த காடுகள் உள்ள இடங்கள், நீர் வளம் நிறைந்த பகுதிகள் என எல்லாவித விவரங்களும் இந்தக் கோளத்திரை மூலம் கிடைக்கும்.

பூமி பந்தாக இருக்கும் இந்த திரையை சந்திரனாக மாற்றும்போது, சந்திரன் பற்றிய அனைத்து தகவல்களும் கிடைக்கப்பெறும். அதேபோல் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் என எந்தக் கோளாகவும் மாற்றி, அந்தக் கோள்கள் பற்றிய விவரங்களை அறியலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை கோளரங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வசதிகள் மூலம் வானியல் நிகழ்வுகள் பற்றி தெளிவாக புரிந்து கொள்ளவும், பூகோளத்தின் எந்த பகுதியைப் பற்றிய வானிலை, சுற்றுச்சூழல் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோளரங்கத்துக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

SCROLL FOR NEXT