சென்னை
சீராக வளர்ச்சி அடைந்துவரும் சிட்டி யூனியன் வங்கி மற்ற வங்கிகள், நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்று சென்னையில் நடந்த வங்கியின் 116-வது நிறுவன தின விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினார்.
சிட்டி யூனியன் வங்கியின் 116-வது நிறுவன தின கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். வங்கியின் அனைத்து சேவைகளையும் ஒரேஇடத்தில் வழங்கும் ‘CUB All in One’என்ற செல்போன் செயலியை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:கடந்த 115 ஆண்டுகளாக எந்தவொரு சிறு களங்கமும் இல்லாதவகையில் சிட்டி யூனியன் வங்கிசெயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது. இந்த வங்கியில் ஒருநாள்கூட வேலைநிறுத்தம் நடந்ததில்லை என்பது மிகவும் சிறப்பு. வங்கி ஊழியர்கள், பங்குதாரர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. ஒரு நிறுவனம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு, பன்னாட்டு நிறுவனங்களைத்தான் வழக்கமாக சுட்டிக்காட்டுவார்கள். இனிமேல் சிட்டியூனியன் வங்கியை முன்மாதிரியாக சொல்லுங்கள். நாட்டில் கடந்த 1936 மற்றும் 2008-ல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, தமிழகத்தில் வங்கிகள் நொடித்தன. ஆனால், சிட்டி யூனியன் வங்கி எந்தவித பாதிப்பும் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் - நிர்வாகத்தினர் உறவும் மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்குகிறது.
‘நிலைத்தன்மை, நீடித்த வளர்ச்சி, மக்கள் நம்பிக்கை ஆகியவைதான் எங்கள் பலம்’ என்று வங்கியின் தலைமை செயல் அதிகாரி கூறினார். தங்களது உண்மையான நிலை, பலம் பற்றி தெரியாமல், வளர்ச்சி என்று கூறிக்கொண்டு அகலக்கால் வைத்துவிட்டு அவதிப்பட்டவர்கள் உண்டு. அவ்வாறு செயல்படாமல், சீராக வளர்ச்சி அடைந்து வரும் சிட்டி யூனியன் வங்கிக்கு ஆண்டவன் அருளும், மக்கள் ஆதரவும் பெருகட்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
வங்கியின் நிர்வாக இயக்குநர், தலைமை செயல் அதிகாரி என்.காமகோடி வரவேற்றுப் பேசும்போது, ‘‘1904-ல் தொடங்கப்பட்ட சிட்டி யூனியன் வங்கி, 650 கிளைகளுடன் வெற்றிகரமாக செயல்பட்டு, தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. உலக வரலாற்றில் இது அபூர்வமான விஷயம். ஒருநாள்கூட வேலைநிறுத்தம் நடைபெறாமல் வங்கி செயல்பட்டு வருவது ஒரு சகாப்தம். இந்த சாதனைக்கு அடித்தளமிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வங்கியின் 116-வது நிறுவன தின விழாவில் மத்திய நிதியமைச்சர் பங்கேற்றது எங்களுக்கு மேலும் உத்வேகம் அளிக்கிறது’’ என்றார். நிறைவாக, வங்கித் தலைவர்ஆர்.மோகன் நன்றி கூறினார். விழாவில், வங்கி வாடிக்கையாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.