சென்னை
கோயம்பேடு சந்தைக்கு வெங்காயம் வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் அதன் விலை கிலோ ரூ.85 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய அளவில் நிலவும் வெங்காயம் பற்றாக்குறையின் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலித்து வருகிறது. அதன் காரணமாக வெங்காயம் விலை தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆசியாவிலேயே பெரிய சந்தைகளில் ஒன்றான கோயம்பேடு சந்தையிலும் வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி கிலோ ரூ.85 ஆக இருந்தது. சாம்பார் வெங்காயத்தின் விலையும் கிலோ ரூ.110 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், சென்னையில் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமை கடைகள் மற்றும் டியூசிஎஸ் நிறுவனம் நடத்தி வரும் நியாயவிலைக் கடைகளில் தொடர்ந்து ரூ.40 விலையில் வெங்காயம் விற்கப்பட்டு வருகிறது.
வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது தொடர்பாக கோயம்பேடு வெங்காய வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.ஜான் வல்தாரிஸ் கூறியதாவது:
கோயம்பேடு சந்தைக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் வருகிறது. தற்போது குறைந்த அளவில் எகிப்து நாட்டிலிருந்தும் வெங்காயம் வரத் தொடங்கிஉள்ளது. இந்த சந்தைக்கு வழக்கமாக தினமும் 65 லோடுகள் வரை வெங்காயம் வரத்து இருக்கும். தற்போது 40 லோடுகள் மட்டுமே வருகின்றன. அதனால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. வரும் ஜனவரியில் தான் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மற்ற காய்கறிகளின் விலை
கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான தக்காளி, பாகற்காய், வெண்டைக்காய் தலா ரூ.25, கத்தரிக்காய், பீன்ஸ், புடலங்காய் தலா ரூ.20, உருளைக்கிழங்கு ரூ.22, அவரைக்காய் ரூ.30, முள்ளங்கி, முட்டைக்கோஸ் தலா ரூ.15, கேரட் ரூ.40, பீட்ரூட் ரூ.35, முருங்கைக்காய் ரூ.250, பச்சை மிளகாய் ரூ.24 என விற்கப்பட்டு வருகின்றன.