சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டதன் விளைவாக நிலத்தடி நீர் மட்டம் கடந்த நான்கு மாதங்களில் சுமார் 2.44 மீட்டர் அளவிற்கு உயர்ந்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகள், அரசுக் கட்டிடங்கள், தனியார் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு பணிகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் ஆணையர் பிரகாஷ், மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன் தலைமையில் இன்று ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பேசியதாவது:
“பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களைப் புனரமைத்து புத்துயிர் அளிக்கவும், அனைத்துக் கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை அமைக்கவும் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பாக பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுநாள்வரை 3,14,932 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் உள்ளனவா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 2,40,019 கட்டிடங்களில் ஏற்கெனவே மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் நல்ல நிலையில் உள்ளன. 26,040 கட்டிடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளில் சிறு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இதில் 39,385 மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் புதியதாக அமைக்கப்பட்டவை. மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்பாடற்றுள்ள 385 சமுதாயக் கிணறுகள் கண்டறியப்பட்டு இக்கிணறுகள் தூர்வாரப்பட்டு அருகாமையில் உள்ள பகுதிகளிலிருந்து மழைநீர் சேகரிக்க இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த பருவ மழையின் காரணமாகவும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் இணைந்து மேற்கொண்ட மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் அமைத்தல், சாலையோரங்களில் மழைநீர் உறை கிணறுகள் அமைத்தல், நீர் நிலைகளைப் புனரமைத்தல் மற்றும் பயன்பாடற்றுக் கிடந்த சமுதாயக் கிணறுகளை மறுசீரமைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகளினால் ஜூலை மாதம் 7.28 மீட்டர் அளவில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்பொழுது 4.84 மீட்டர் அளவில் அதாவது சுமார் 2.44 மீட்டர் அளவிற்கு உயர்ந்துள்ளதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன”.
இவ்வாறு ஆணையர் பிரகாஷ் கூட்டத்தில் தெரிவித்தார்.
கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்களிலும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை அமைக்க சம்பந்தபட்ட நிறுவன உரிமையளர்களை அறிவுறுத்துமாறு ஆணையர், அலுவலர்களிடம் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) குமாரவேல் பாண்டியன், துணை ஆணையர் (சுகாதாரம்) மதுசுதன் ரெட்டி, வட்டார துணை ஆணையர்கள் பி.என்.ஸ்ரீதர், ஆல்பி ஜான் வர்கீஷ், பி.ஆகாஷ், தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் செயற்பொறியாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.