தமிழகம்

ரஜினியும், கமலும் இணைந்தால் வார்டு உறுப்பினர் தேர்தலில் கூட வெற்றி பெறமுடியாது: தனியரசு எம்எல்ஏ பேச்சு

பி.டி.ரவிச்சந்திரன்

ரஜினியும், கமலும் இணைந்தால் வார்டு உறுப்பினர் தேர்தலில் கூட வெற்றி பெறமுடியாது. எம்ஜிஆர்., கருணாநிதி முதல் இன்று ரஜினி, கமல், விஜய் வரை திரைத்துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் தமிழக அரசியலை கெடுத்துவைத்துள்ளனர், என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தமிழர் விடியல் கட்சி சார்பில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 65 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., தமிழக மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் கே.எம்.ஷெரீப் உட்பட பலர் கலந்துகொண்டார். 65 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., பேசும்போது "கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரிடம் இருந்து பிரிந்துவந்து அண்ணா ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று கூறி ஆட்சியை பிடித்தார்.

அவருடன் இருந்த இருவரில் ஒருவர் திரைத்துறையில் வசனம் எழுதியும், ஒருவர் நடித்தும் தமிழக அரசியலில் முக்கிய இடத்தை பிடித்தனர். பின்னர் தனித்தனியாக பிரிந்து தமிழக அரசியலை பங்குபோட்டுக்கொண்டனர்.

தற்போது 2021-ல் அதிசயம் நிகழப்போகிறது என்று குடுகுடுப்பைக்காரர் போல ஒருவர் வந்துவிட்டார். 16 வயதினிலே சப்பாணியும், பரட்டையும் ஒன்று சேர்ந்து வருவதாக மக்களை ஏமாற்றுகிறார்கள். அன்று எம்.ஜி.ஆர்., கருணாநிதி முதல் இன்று ரஜினி, கமல், விஜய் வரை திரைத்துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் தமிழக அரசியலை கெடுத்துவைத்துள்ளனர்.

அறிவார்ந்த தமிழ் சமூகத்திற்கு அறிவை ஊட்டும் நேரமிது. ரஜினியும், கமலும் இணைந்தால் வார்டு உறுப்பினர் தேர்தலில் கூட வெற்றிபெறமுடியாது.

திமுக, அதிமுக ஆகியவை கூட்டணிக்கட்சிகளை சமாளிக்கவே மேயர் பதவிகளை மறைமுகமாக தேர்வு செய்வது என்ற வழியை பின்பற்றுகிறது. இது சரியான முறையல்ல. மகாராஷ்டிராவில் பாரதியஜனதா ஆட்சிஅமைத்திருப்பது ஜனநாயக விரோதம்" என்றார்.

SCROLL FOR NEXT