தமிழகம்

மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்கிறது

செய்திப்பிரிவு

தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நீர்வரத்துப் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், காவிரி கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் தற் போது உயர்ந்து வருகிற நிலையில், நேற்று முன்தினம் காலை அணைக்கு விநாடிக்கு 16 ஆயிரத்து 440 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 18 ஆயிரத்து 867 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 91.59 அடியாக இருந்த நிலையில் நேற்று 92.19 அடியாக உயர்ந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக 10 ஆயிரம் கனஅடி தண்ணீரும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்காக 500 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இதேபோல, காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை நீடித்தால் வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT