வேலூர் அஞ்சல் கோட்டத்தில் கடிதங்கள் தாமதமில்லாமல் சென்று சேருவதற்காக மாநகராட்சியில் 135 டிஜிட்டல் தபால் பெட்டிகள் திட்டத்தை தொடங்கி வைத்த கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் கோமல்குமார் | படம்:வி.எம்.மணிநாதன். 
தமிழகம்

வேலூர் மாநகராட்சியில் 135 ‘டிஜிட்டல் தபால் பெட்டிகள்’: காலதாமதமாகும் கடித போக்குவரத்துக்கு முடிவு 

செய்திப்பிரிவு

வேலூர் அஞ்சல் கோட்டத்தில் கடிதங்கள் தாமதமில்லாமல் சென்று சேருவதற்காக மாநகராட்சியில் 135 டிஜிட்டல் தபால் பெட்டிகள் திட்டம் தொடங்கப்பட்டது.

வேலூர் கோட்ட அஞ்சல் துறையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 135 இடங்களில் தபால் பெட்டிகளை வைத்துள்ளனர். தபால் பெட்டி களில் சேரும் கடிதங்களை தபால் காரர்கள் தினசரி இரண்டு அல்லது மூன்று வேளைகள் சேகரித்து பட்டுவாடா செய்து வருகின்றனர். இந்தப் பணி முறையாக நடக்கிறதா? என்பதை கண்காணிக்கவும் பொதுமக்களின் கடிதங்கள் குறிப்பிட்ட காலத்தில் அந்தந்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனவா? என்பதை கண்டறியவும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர் மாநகராட்சியில் உள்ள தபால் பெட்டிகள் டிஜிட்டல் மயமாக்கப் பட்டுள்ளன. இதற்காக, ஒவ்வொரு தபால் பெட்டியின் உள்பக்கமும் பார் கோடு ஒட்டப்பட்டுள்ளது. இந்த பார் கோடுகளை ஸ்கேன் செய்வதற்காக ஒவ்வொரு தபால்காரருக்கும் அஞ்சல் துறை சார்பில் தனியாக செல்போன் வழங்கப்பட்டுள்ளது. இந்த செல்போனில் இருக்கும் ‘நன்யதா’ என்ற பிரத்யேக செயலியின் வழியாக பார் கோடுகளை ஸ்கேன் செய்வதுடன் அந்த பெட்டியில் இருந்து எத்தனை கடிதங்கள் எடுக்கப்பட்டன என்ற விவரத் தையும் அவர் அந்த இடத்திலேயே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதன் மூலம் ஒவ்வொரு தபால் பெட்டியும் யாரால் எந்த நேரத்தில் திறக்கப்பட்டது என்றும், அதிலிருந்து எத்தனை கடிதங்கள் எடுக்கப்பட்டது என்ற விவரத்தையும் தபால் துறை இயக்குநர் வரையிலான அதிகாரிகள் இருந்த இடத்தில் இருந்தபடியே தெரிந்துகொள்ள முடியும். மேலும், கடிதங்கள் சேகரிப்புப் பணி முறையாக நடக்கும் என்பதால் கால தாமதமாக கடிதங்கள் பட்டுவாடா ஆவதும் முற்றிலும் தவிர்க்கப்படும்.

இந்நிலையில், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் 135 ‘டிஜிட்டல் தபால் பெட்டி’ திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. வேலூர் தலைமை தபால் நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் கோமல்குமார் தொடங்கி வைத்தார். அப்போது, தலைமை அஞ்சலக அதிகாரி சீனிவாசன், மக்கள் தொடர்பு அதிகாரிகள் செல்வகுமார், சிவலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வேலூர் அஞ்சல் கோட்டத்தில் மொத்தம் 498 இடங்களில் தபால் பெட்டிகளை வைத்துள்ளனர். வேலூர் மாநகராட்சியில் 135 தபால் பெட்டிகள் டிஜிட்டல் மயமானதைப் போல் மற்ற பகுதிகளில் உள்ள தபால் பெட்டிகளும் விரைவில் டிஜிட்டல் மயமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT