தமிழகம்

நடிகர்கள் அரசியல் பேசி அப்பாவி மக்களை திசை திருப்புவது குற்றம்: கே.எஸ்.அழகிரி கருத்து

செய்திப்பிரிவு

தூத்துக்குடி

நடிகர்கள் அரசியல் பற்றி பேசி அப்பாவி மக்களின் கவனத்தை திருப்புவது மிகப்பெரிய குற்றம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

2021-ல் அதிசயம் நிகழும் என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் வேண்டுமானால் ரஜினி எடுக்கலாம். ரஜினியோ அல்லது வேறு எந்த நடிகரோ அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பது தவறானது. ஏனென்றால் ரஜினி ஒரு திரைப்படத்துக்கு ரூ.100 கோடி சம்பளம் வாங்குகிறார்.

இவர்கள் ஏதாவது ஒரு சமூக பிரச்சினைக்கு போராடி இருக்கிறார்களா? தெளிவான கருத்தை தெரிவித்து இருக்கிறார்களா? அரசாங்கம் செய்யும் தவறை வெளிப்படையாக கண்டித்து இருக்கிறார்களா?

திரைப்படம் என்பது ஒரு தொழில். அந்தத் தொழிலில் வெற்றிகரமாக சம்பாதிக்கிறார்கள், பொருள் ஈட்டுகிறார்கள். அந்த வகையில் அவர்களை பாராட்டுகிறேன்.

ஒருபுறம் பொருள் ஈட்டிக் கொண்டு, இன்னொரு புறம் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அரசியலைப் பற்றி பேசி அப்பாவி பொதுமக்களின் கவனத்தை திருப்புவது என்பது மிகப்பெரிய குற்றம் என்று கருதுகிறேன்.

திரைப்பட நடிகர் மத்திய அரசின் தவறை ஆனித்தரமாக எடுத்துக் கூற முடியுமா?. அயோத்தி பிரச்சினையில் ரஜினி கருத்து என்ன?. புதிய கல்விக் கொள்கையில், இலங்கை பிரச்சினையில், காவிரி பிரச்சினையில், பொருளாதார கொள்கையில் இவர்களது கருத்து என்ன?.

ஆளும் மத்திய, மாநில அரசுக்கு எதிராக ஒரு கருத்து சொன்னால், அவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடக்கும். இதனால் அவர்கள் வாய் மூடி மவுனியாகிவிடுகிறார்கள்.

மத்திய அரசை எதிர்த்து நாங்கள் பேசுகிறோம். இதனால் எங்களது முக்கிய தலைவர்கள் 2 பேர் சிறையில் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள், அரசின் தவறுகளை சுட்டிக் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு திரைப்பட நடிகரால் அப்படி இருக்க முடியுமா?, அரசு செய்யும் தவறை உங்களால் கண்டிக்க முடியுமா?. அதற்கு எதிராக போராட முடியுமா?.

ரூ.100 கோடி சம்பளம் வாங்குபவர்கள் கணக்கு காட்டுகிறீர்களா. நீங்கள் வருமான வரித்துறைக்கு எவ்வளவு பயந்து வாழ்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். எனவே நீங்கள் அரசியல் பேசுவதோ, நாட்டில் மறுமலர்ச்சி வரும் என்று சொல்வதோ, 2021, 2031 என்று சொல்லிக் கொண்டு இருப்பதோ பொருத்தமற்ற விஷயங்கள்.

நடிகர்களை ரசிக்கலாம். ஆனால் நடிகர்களின் அரசியலை ஏற்றுக் கொள்ள முடியாது. நடிகர்கள் அரசியல் கட்சியில் அங்கம் வகிப்பது தவறு அல்ல. ஆனால் நானே கட்சியை நடத்துவேன், அரசை நடத்துவேன், ஆட்சியை நடத்துவேன் என்று சொல்வதுதான் தவறு.

நடிகர்களின் அரசியல் பிரவேசம் என்பது எனது எம்ஜிஆருடன் முடிந்து விட்டது. அதன்பிறகு எந்த நடிகருக்கும் அந்த வாய்ப்பை தமிழக மக்கள் வழங்கமாட்டார்கள். ரஜினிகாந்தும், கமலும் இணைந்தாலும் தமிழகத்தில் மாற்றம் வராது.

திரைப்பட நடிகர்கள் திரைப்படத்துறையில் தங்கள் காலம் முடிவுற்று, ஓய்வு பெறும் காலம் வருகிற போது, கொஞ்சகாலம் அரசியலிலும் இருப்போம் என்று நினைத்து வருவதை ஏற்கமாட்டோம். அது தேவையில்லாதது. ஆகையால் அவர்கள் யாரோடு சேர்ந்தாலும் அது ஆரோக்கியமானது அல்ல.

திமுக தலைமையிலான கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அதிமுக கூட்டணியில் தான் குழப்பம் உள்ளது. காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை விடுதலை புலிகளை ஏற்றுக் கொள்வது இல்லை. ஒன்றுபட்ட, உரிமை உள்ள அரசாங்கத்தை தான் எதிர்பார்க்கிறோம். ராஜபக்க்ஷே ஆட்சியில் அது நடப்பது மிகவும் குறைவு.

இந்தியா அழுத்தத்தை கொடுக்கும் போது, அதற்காக வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்காக தமிழக அரசு தான் சூழ்ச்சி செய்கிறது. ஏற்கனவே நேரடி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார்கள். தற்போது மறைமுக தேர்தலை கொண்டு வந்துள்ளார்கள். தேர்தலில் அவர்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தால் நேரடி தேர்தலை நடத்தி இருப்பார்கள்.

நாங்கள் தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். மக்கள் வாக்களிக்கும் தேர்தலாக இருந்தால் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். மக்கள் மூலமாக மேயர் தேர்வு செய்யப்பட்டால் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டால், அந்த உறுப்பினர்களுக்குதான் மேயர் பதில் சொல்வார்.

உள்ளாட்சி தேர்தலில் எங்களுக்கு தேவையான இடத்தை கூட்டணி கட்சியிடம் இருந்து கேட்டு பெறுவோம். இடைத்தேர்தலில் அதிமுக ஏலம் எடுப்பது போன்று வெற்றி பெற்றுள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் அது நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT