திருநெல்வேலி
ரஜினி, கமல் சேர்ந்து வந்தாலும் அரசியலில் ஜொலிக்க முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திருநெல்வேலியில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், "உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆரம்பத்தில் இருந்தே தமிழக அரசு நேர்மையாக நடந்துகொள்ளவில்லை. நேரடி முறையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவோம் என உச்ச நீதிமன்றத்தில் அரசு கூறியது.
ஆனால் இப்போது, மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கூறுகிறது. மக்கள் பங்களிக்காத எந்தத் தேர்தலும் மக்களுக்குப் பயனளிக்காது.
அது ஜனநாயகத்துக்கு புறம்பானது. மறைமுக தேர்தல் குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும். பண பலம், அதிகார பலத்தைக் கொண்டு அதிகாரத்தை கைப்பற்றும் முறை ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. கொல்லைப்புறம் வழியாக உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்ற அதிமுக நினைக்கிறது.
மறைமுக தேர்தலை ஸ்டாலின் கொண்டுவந்தார், நானும் அதனை செய்கிறேன் என சொல்வது முதல்வருக்கு அழகல்ல. ஸ்டாலின் செய்தார் நானும் செய்வேன் என சொன்னால் அதிமுகவை கலைத்துவிட்டு முதல்வர் பழனிச்சாமி திமுகவில் ஸ்டாலினுக்கு தொண்டராகிவிடலாம்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பின்னர் அரசியலுக்கு வந்த எந்த நடிகர்களாலும் ஜொலிக்க முடியவில்லை. மக்கள் பணி என்பது வேறு, அரசியல் என்பது வேறு. ரஜினியும் கமலும் சேர்ந்து வந்தாலும் அரசியலில் ஜொலிக்க முடியாது.
2021-ல் மக்கள் அதிசயத்தை காண்பார்கள் என ரஜினி சொன்னது புதிய திரைப்படத்துக்கான தலைப்பாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.